காலை உணவுத் திட்டம்: அரசியல் கடந்து பாராட்டும் தலைவர்கள்!

அரசியல்

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 15) அறிமுகம் செய்யப்பட்ட காலை உணவுத் திட்டத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

The Chief Minister's breakfast program is receiving praise

இந்த திட்டத்தின் அறிமுகத்திற்குப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மேலும், பலர் காலை நேரத்தில் வீட்டில் உணவருந்தாமல் வரும் குழந்தைகள் மதிய உணவு நேரம் வரை பசியோடு இருக்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

இதற்குப் பொதுமக்கள் மட்டுமல்லாது பல அரசியல் தலைவர்களும் தங்களது பாராட்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

“தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.

அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் ஆகும்.

ஐந்து வயதான அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளுக்குக் கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். பள்ளியில் சேர்ந்த மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும்” என்று டாக்டர் ராமதாஸ் இத்திட்டத்தைப் பாராட்டியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

”அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மதிய உணவுத் திட்டத்துடன் சேர்த்து காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்தி இருக்கும் தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்

“காலை உணவுத் திட்டம் எளியோரின் அடிவயிற்றில் பால்வார்க்கும் திட்டம். இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்மாதிரித் திட்டம். பசியாறினால் பலவும் பயனுள்ளதாய் அமையும்.

பொறுமையும் மகிழ்வும் பூவிதழ்களாய் மலரும். பசிப்பிணி மருத்துவராய் பரிணாமம் பெற்றுள்ள முதல்வருக்கு எமது பாராட்டுகள்” என்று பாராட்டியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் தலைவர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

“எந்த சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்கி மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்காகக் கல்வி நிலையங்களில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் காமராஜர்.

அத்தகைய புரட்சிக்கு வித்திட்ட தமிழகத்தில், மற்றுமொரு புரட்சி 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாகக் காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கியிருப்பதை மனதார வரவேற்கிறேன்” என்று பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

மோனிஷா

காவல் நிலையத்திலேயே மாமூல்: உயர்நீதிமன்றம் வருத்தம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *