அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்தக் கட்சியில் புதிய நிர்வாகிகளை அறிவித்து வருகிறார். அதன்படி, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர், இன்று (ஜூலை 23) மதுரை டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவிலும், புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரெளபதி முர்மு பதவி ஏற்பு நிகழ்விலும் அதிமுகவின் ஒற்றை முகமாக, அதிமுகவின் பொதுச்செயலாளராகக் கலந்துகொள்ள மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்புவிடுத்துள்ளது. மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுகவும் உடந்தை
ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதை, அவர் உதாசீனப்படுத்தியதால், இன்று அரசியலில் தனித்துவிடப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவே உண்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் வரும் 25ம் தேதி திமுக ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டம் வரும்காலத்தில் துரோகத்துக்கும், எதிரிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் இருக்கும்.
அதிமுக தொண்டர்களின் இதயமாய் இருக்கும் தலைமை அலுவலகம் செருப்புக் காலால் உதைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற பிரச்சினைகளுக்கு திமுகவும் உடந்தை. அதன் காரணமாகவே அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்த சம்பவமும், அதன்பின் நடைபெற்ற கலவரமும் தமிழகத்துக்கு தலைகுனிவு. இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்