நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் 12 ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை ஆறு மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், நாங்குநேரி சம்பவத்தில் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் இந்த கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சாதி என்பது அழகிய சொல்.
குடி பெருமை கொள்ளுவோம். சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெறுவது.
சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது.
நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது. சாதி பெருமை உடை. சாதி அடையாள கயிறு.
சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு,
இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும்,
மக்களும் இணைந்து, அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்”என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா