குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) விதிகள் அமலுக்கு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 11) அறிவித்துள்ளது. CAA Act came into effect
2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இஸ்லாமியர்கள் தவிர்த்து இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்யும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், சிஏஏ சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
பொதுவாக நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற 6 மாதங்களுக்குள் எந்தவொரு சட்டத்திற்கும் விதிகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் உள்ள துணைச் சட்டங்களுக்கான குழுக்களிடமிருந்து அரசாங்கம் நீட்டிப்பைக் கோர வேண்டும்.
அதன்படி மத்திய அரசு கடந்த 2020 முதல், நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து உள்துறை அமைச்சகம் தொடர்ந்து நீட்டிப்பு கோரி வந்தது.
எனினும் சுமார் நான்கு ஆண்டுகளாக புதிய விதிகள் அறிவிக்கப்படாததால் சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தாமதமாகி வந்தது.
இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 27ஆம் தேதி கொல்கத்தாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “யார் நினைத்தாலும் நாட்டில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக சிஏஏ விதிகள் அறிவிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பலமுறை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில், “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஎ) 2019இன் கீழ் உள்ள விதிகளை உள்துறை அமைச்சகம் இன்று அறிவிக்கும்.
குடியுரிமை திருத்த விதிகள் 2024 என அழைக்கப்படும் இந்த விதிகள், சிஏஏ – 2019 இன் கீழ் தகுதியான நபர்கள் இந்திய குடியுரிமை வழங்குவதற்கு விண்ணப்பிக்க உதவும்.
விண்ணப்பங்கள் முற்றிலும் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கப்படும், அதற்காக ஒரு இணைய தளம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சிறார் ஆபாச பட வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!
கடுமை, கண்ணியம் : மத்திய தேர்தல் பார்வையாளர்களுக்குத் தலைமை ஆணையர் அறிவுறுத்தல்!
Power Cut சிறப்பு திட்டத்தை கையில் எடுக்கும் மின்வாரியம்!