தேர்தலுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு என வெளிப்படையாக கூறி திமுக கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்த விஜய் பார்க்கிறார் என்று திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் விண்ணவனுர் கிராமத்தில் JP பந்தல் நிறுவனர் விஸ்வநாதன் இல்லத் திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று (அக்டோபர் 29) கலந்துகொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “தவெக முதல் மாநாட்டை விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார். அவரிடம் ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் சொல்வதிலேயே அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.
நண்பர்கள் யார் யார் என அடையாளம் காட்டுவதை விட, தனது எதிரிகள் யார் என்பதை அறிவிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்.
அதில் பிளவுவாத சக்திகள் தனது முதல் எதிரி என்றும், ஊழல்வாதிகள் தனது 2வது எதிரி என்றும் குறிப்பிட்டார். எனினும் அந்த பிளவுவாத சக்தி யார் என்பதை அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற கொள்கையை அவர் கொண்டுள்ளதை கண்டு மகிழும் வேளையில், பெரும்பான்மை, சிறுபான்மை என மக்களை பிளவுபடுத்துபவர்கள் யார் என்பதை அவர் வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும்.
பாஜக எதிர்ப்பில் உறுதியாக இல்லை!
இந்தியாவில் பாஜக தான் பிளவுபடுத்தும் அரசியலை செய்து வருகிறது. அவர்களின் ஆட்சியில் முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் அச்சத்தில் வாழ்கின்றனர். இந்த நிலையில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அரசியலிலேயே நம்பிக்கை இல்லை என்று மேம்போக்காக சொல்லி செல்கிறார். இதனால் அவரது நிலைப்பாட்டில் புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாசிசம் – பாயசம் என்று அவர் கூறியதில், ’பாசிச எதிர்ப்பு ஒன்றும் பெரிய விசயமில்லை’ என்ற பொருள்படுகிறது. மேலும் ’நீங்களும் பாசிஸ்டுகள் தான், ஜனநாயக சக்திகள் ஒன்றும் இல்லை’ என்று சொல்வதாக புரிந்து கொள்ளலாம்.
அப்படியென்றால் திமுகவை மட்டும் சொல்கிறாரா? இல்லை இந்தியா கூட்டணியில் உள்ள 28 கட்சிகளையும் சொல்கிறாரா என கேள்வி எழுகிறது. பாசிச எதிர்ப்பை கேலி செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பது புரிகிறது.
திமுக கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்த முயற்சி!
அவர் உரையில் திமுகவையும், திமுகவின் வாரிசு அரசியலையும் மட்டுமே மிக கடுமையாக பேசினார். அது ஒன்றும் புதிதல்ல. விஜய்யிடம் நாம் எதிர்பார்த்த ஆக்கப்பூர்வமான திட்டங்கள், கொள்கைகள் எதுவும் இல்லை என்பதையே அது எடுத்துக்காட்டுகிறது.
தேர்தலுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு என்பது ’வலை வீசுவதற்கு முன்பாகவே கல்லெறிவது’ போன்றது. இதனை மறைமுக செயல்திட்டமாக தான் வைத்திருக்க வேண்டும். மாறாக வெளிப்படையாக பேசுகிறார் என்றால் திமுக கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்த பார்க்கிறார் என்று தான் பொருள்.
அவரது பாணியில் சொல்வது என்றால் யுத்த களத்தில் வீசுவதற்கு பதிலாக அணுகுண்டை வெறும் தரையில் தவறாக வீசியிருக்கிறார். அது அவருக்கு எதிராக வெடிக்கக்கூடிய நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது” என்று திருமாவளவன் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்கு : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!
தவெக உடன் காங்கிரஸ் கூட்டணியா?: செல்வப்பெருந்தகை சொன்னது என்ன?
சாரி… திருமா… உங்களுக்குதான் ஆபத்து