ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேருவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவின் தேசிய தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளரான அமித் மால்வியா, கடந்த 9ஆம் தேதியன்று வெளியான மத்திய அரசின் அரசாணையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர், “ 1966ல் 58 ஆண்டுகளுக்கு முன், 1966ல், ஆர் எஸ் எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசியல் சாசனத்துக்கு எதிரான உத்தரவு மோடி அரசால் திரும்பப் பெறப்பட்டது.
அசல் உத்தரவு முதலில் நிறைவேற்றப்பட்டிருக்கக் கூடாது.
1966ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பசுக்கொலைக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றதால் இந்தத் தடை விதிக்கப்பட்டது.
ஆர்எஸ்எஸ்-ஜனசங்கம் லட்சக்கணக்கில் ஆதரவைத் திரட்டியது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். தொடர்ந்து ஆர்எஸ்எஸ் செல்வாக்கால் அதிர்ச்சியடைந்த இந்திரா காந்தி, 30 நவம்பர் 1966 அன்று, அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்-ல் சேருவதை தடை செய்தார்.” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
விரிசலை சரி செய்ய தடை நீக்கம்!
தேசிய காங்கிரஸ் செய்தித்துறை பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “1948 பிப்ரவரியில் தேசப்பிதா மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்தார்.
பின்னர் நன்னடத்தை உறுதியின் பேரில் தடை நீக்கப்பட்டது. இதற்குப் பிறகும் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடியை ஏற்றவில்லை.
தொடர்ந்து 1966ல் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது – அது சரியான முடிவு.
மக்களவைத் தேர்தலுக்கும் நான் பயோலாஜிக்கல் பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனை சரிசெய்ய வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட நடைமுறையில் இருந்த தடையானது கடந்த 58 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூலை 9ஆம் தேதி நீக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மோடி அரசுக்கு எனது கண்டனம்!
அதே போன்று மதுரை மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ”மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பெளர்ணமியை தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு!
ShareMarket : முதல் காலாண்டில் பெரும் லாபம் கண்ட இந்திய ஐடி நிறுவனங்கள்!