நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 20) அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து இன்று 17 பேர் கொண்ட 2ஆம் மற்றும் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 33 நேரடி வேட்பாளர்களுடன் களமிறங்குகிறது.
இந்தநிலையில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களின் பின்னணி குறித்து இங்கு காண்போம்.
தருமபுரி – டாக்டர் அசோகன்
இவர் தருமபுரி அதிமுக நகர செயலாளராக இருக்கும் பூக்கடை ரவியின் மகன் ஆவார். தாயார் ராஜாத்தி தருமபுரி நகராட்சி 33வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக உள்ளார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராக அசோகன் பணியாற்றி வருகிறார்.
இவர் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகனால் அடையாளம் காட்டப்பட்டவராக இருந்தாலும் அதிமுகவினர் மத்தியிலேயே பெரியளவில் அறிமுகம் இல்லாதவர் என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.
வேலூர் – டாக்டர் பசுபதி
இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர். நேற்றுவரை அரசு மருத்துவமனை மருத்துவராக இருந்து வந்தார். இவரது மனைவியும் மருத்துவர். அவர் வாணியம்பாடியில் கிளினிக் வைத்துள்ளார்.
இவருடைய தந்தை ஒரு விவசாயி. அவர் அதிமுகவில் எந்த பதவியும் இன்றி அனுதாபியாக இருந்து வந்தவர். டாக்டர் பசுபதியும் அதிமுகவில் எந்த பொறுப்பும் இன்றி அடிப்படை உறுப்பினராக இருந்து வந்தார். மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவர் பதவியில் இருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் – டாக்டர் பிரேம்குமார்
இவர் திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்து வரும் பூவை ஞானத்தின் மகன். காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவம் படித்து, பின்னர் அதே மருத்துவமனை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
குன்றத்தூரில் உள்ள மாதா மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவராக தற்போது பணி செய்து வருகிறார். தந்தையுடன் சேர்ந்து சொந்தமாக திருமண மண்டபங்களையும் கவனித்து வருகிறார்.
கோயம்புத்தூர் – சிங்கை ராமச்சந்திரன்
இவர் சிங்கநல்லூர் தீவிர அதிமுக உறுப்பினரான கோவிந்தராசுவின் மகன் ஆவார். இவர் முன்னான் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர். 1987 ம் ஆண்டு பிறந்த இவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் இவருக்கு ராமச்சந்திரன் எனப் பெயர் வைத்துள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள பிரபல பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ. படித்தார்.
இவர் கடந்த மார்ச் 2016 இல் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக ராமச்சந்திரனை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நியமித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவளித்த காரணத்திற்காக பிப்ரவரி 2017 இல், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி வி.கே.சசிகலாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் இரு அணிகளும் இணைந்ததையடுத்து, மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டு, தற்போது தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்கது.
கள்ளக்குறிச்சி – குமரகுரு
இவர் 2006 ஆம் ஆண்டு திருநாவலூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 மற்றும் 2016 என இருமுறை உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மறைந்த தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்தை தோற்கடித்தார்.
2021 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 5,256 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.
2019 முதல் 2021 வரை இரண்டு ஆண்டுகள் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தற்போது அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வருகிறார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர். சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதியை தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து, அதற்காக உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.
புதுச்சேரி – தமிழ்வேந்தன்
இவர் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர். 34 வயதான இவர் மீனவ சமூகத்தை சார்ந்தவர். ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்டரக்ஷன் நிறுவனம் நடத்தி வருகிறார்.
புதுச்சேரி அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளாராக இருக்கிறார். அதிமுக எம்.எல்.ஏவும், அதிமுக மாநில அமைப்பாளருமான அன்பழகனின் ஆதரவாளர்.
பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி
இவர் முன்னாள் எம்.பியும் தற்போது மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான மகேந்திரனின் அக்கா மகன் ஆவார். இவர் ஆனைமலை ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளராகவும் மாசாணியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்துள்ளார்.
நெல்லை – சிம்லா முத்துச்சோழன்
இவர் திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள். கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூர் இவரது பூர்வீகம். என்றாலும் சென்னையில் வளர்ந்த இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படித்த அதே சர்ச்பார்க் கான்வென்டில் படித்தவர்.
பிபிஏ., எல்எல்பி., முடித்து தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். அவரது கணவர் முத்துச்சோழனும் வழக்கறிஞர்
கடந்த 20 வருடங்களாக திமுகவில் பணியாற்றி வந்தார். வடசென்னை மகளிர் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மற்றும் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக பதவி வகித்தார்.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டார். அந்த தேர்தலில், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றாலும் தமிழகம் முழுவதும் அறியப்பட்டார்.
எனினும் அடுத்து வந்த தேர்தல்களில், தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இம்மாத தொடக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிம்லா முத்துசோழன்.
ஈரோடு – ஆற்றல் அசோக் குமார்
இவர் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட காங்கேயம், ஈரோடு, தாராபுரம், பவானி, குமாரபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியிலும் 20 உணவகம் வைத்துள்ளார்.
அந்த உணவகத்தில் மதிய சாப்பாடு 10 ரூபாய் என்று மக்கள் மனதில் பெரும் இடம்பிடித்துள்ளார். மேலும் கிராமப்புறங்களில் இருந்து கோவில் திருவிழா என்றால் நோட்டீஸ் அடித்து கொடுப்பது மற்றும் நன்கொடை கொடுத்து தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
இவர் பாஜகவை சார்ந்த மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் – பாக்யராஜ்
இவருக்கு சொந்த ஊர் உளுந்தூர் பேட்டை. அதிமுக கட்சியில் 2011 முதல் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2014 வரை தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை இயக்குனராக பணியாற்றினார். தற்போது கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ளார். ஸ்டார் ஹோட்டல் ஒப்பந்ததாரராக பணி செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி வேட்பாளர் குமரகுருவால் பரிந்துரைக்கப்பட்டவர். எனினும் பெரியளவில் மக்களிடையே இவர் அறிமுகம் இல்லாதவர் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
ஓசூரை சேர்ந்த இவர் 2011ஆம் ஆண்டு பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர் . ரியல் எஸ்டேட், குவாரி போன்ற பிசினஸை மேற்கொண்டுள்ளார். கடந்த காலங்களில் தன்மீது பதியப்பட்ட கொலை, கொலைமுயற்சி வழக்குகளில் இருந்து விடுதலையானவர். தற்போது கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக உள்ளார்.
நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்துள்ள இவர் தற்போது ஓசூர் மாநகராட்சி 42-வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவராகவும் உள்ளார்.
திருச்சி – கருப்பையா
இவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா குழந்திரான் பட்டு கிராமத்தை சேர்ந்தவர். ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளராக உள்ளார். 39 வயதான இவர் சிமெண்ட், ஜல்லி, மணல் வியாபாரம் செய்து வருகிறார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரையால் எம்.பி வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
இவரது பூர்விகம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது. 42 வயதான இவர் தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்ட தி நகர் பகுதி செயலாளராக உள்ளார். டி.எம்.ஒய்.எஸ். முடித்துள்ள சிவசாமி வேலுசாமி சென்னை வடபழனியில் பாரம்பரியமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் முன்னாள் அமைச்சரும், தற்போது அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி சண்முக நாதனின் அக்கா மகன் ஆவார்.
அடுத்தடுத்த வேட்பாளர்களின் விவரங்கள் தொடரும்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
IPL: ஆபா்களை வாரி ‘வழங்கி’… வள்ளலாக மாறிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!
“ரயில் டிக்கெட் வாங்க கூட காங்கிரசிடம் நிதி இல்லை”: மோடி மீது சோனியா, ராகுல் புகார்!