புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 5 இடங்கள், சேலத்தில் 3 இடங்கள் மற்றும் மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
முதல் தகவல் அறிக்கை
விஜயபாஸ்கர் மீது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மஞ்சகரனையில் உள்ள வேல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது.
இதனை 150 மாணவர்கள் சேர்க்கைக்கான மருத்துவக் கல்லூரியாக மாற்ற 2019 நவம்பர் 3ம் தேதியன்று அனுமதி கேட்டு வேல்ஸ் குழுமத்தின் சேர்மன் ஐசரி கணேஷ் விண்ணப்பத்தார்.
வேல்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்வதற்காக,
2020 மார்ச் 11 அன்று சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் டீனாக இருந்த பாலாஜி நாதன் தலைமையில் பேராசிரியர்கள் மனோகர், சுஜாதா, வசந்தகுமார் ஆகிய 4 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டது.
இதனையடுத்து அதே ஆண்டு நவம்பர் 16 அன்று மஞ்சகரனையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனையில் பாலாஜிநாதன் தலைமையிலான நால்வர் குழு ஆய்வு செய்தது.
ஆய்வின் முடிவில், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் அனைத்தும் வேல்ஸ் மருத்துவமனையில் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன என்றும், மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கலாம் என்றும் அறிக்கை அளித்தனர்.
அதனைதொடர்ந்து 2020 நவம்பர் 27 அன்று மருத்துவமனையை புதிய மருத்துவக்கல்லூரியாக தொடங்க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.
திடீர் ஆய்வால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 18 அன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 50 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தினர்.
அதனைதொடர்ந்து நவம்பர் 02 அன்று மஞ்சகரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக்கல்லூரியில் அரசு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, டீன் பாலாஜி நாதன் தலைமையிலான மருத்துவக்குழு வெளியிட்ட அறிக்கையில் பல தவறான தகவல்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும் அப்போது வேல்ஸ் மருத்துவமனையில் தேவையான கட்டிடங்கள் கட்டப்பட்டு மட்டுமே வந்துள்ளன.
ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரங்கள் மற்றும் ரத்த வங்கி போன்றவை அப்போது செயல்பாட்டிலேயே இல்லை என்பதும் தெரியவந்தன.
பொய்யான தகவல் அளித்த டீன்!
தேசிய மருத்துவ ஆணையத்தில் விதிமுறைகளின்படி மருத்துவக்கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை இருப்பது அவசியம்.
அதேபோல் மருத்துவமனை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் மருத்துவ கல்லூரி அமைக்க வேல்ஸ் குழுமத்திற்கு அனுமதி வழங்கியதில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
வேல்ஸ் மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜ், அரசின் அனுமதி சான்றிதழ் பெறுவதற்காக பல பொய்யான தகவல்கள் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆராயாமல் பாலாஜி நாதன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், வேல்ஸ் மருத்துவமனையில் 300 படுக்கை வசதி மற்றும் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தும் அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதாக அறிக்கை அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!
இதனையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, மருத்துவ ஆய்வு குழுவினரை வேல்ஸ் குழுமத்திற்கு சாதகமான அறிக்கையை தயார் செய்ய தூண்டியது போன்ற குற்றத்திற்காக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்துமனை சேர்மன் ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேல்ஸ் மருத்துவமனைக்கு சாதகமான மற்றும் பொய்யான அறிக்கையை தயார் செய்த சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் டீன் பாலாஜி நாதன், பேராசிரியர்கள் மனோகர், சுஜாதா, வசந்தகுமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
குட்கா, ஜெ.மரணம், ரெய்டு: விஜயபாஸ்கருக்குத் தொடரும் நெருக்கடி!