திமுக விழாவுக்கு ராஜ்நாத்தை மோடி அனுப்பிய பின்னணி!

Published On:

| By christopher

The background of Modi sending Rajnath to the kalaingar 100 ruppee coin function

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நேற்று ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் விமரிசையாக நடைபெற்று முடிந்தது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை முகம் மலர வெளியிட்டதுடன்,  ‘தேசிய அரசியலை தீர்மானித்தவர், வேற்றுமையில் ஒற்றுமையை போற்றியவர், கூட்டாட்சி தத்துவத்திற்காக பாடுபட்டவர்’ என புகழாரம் சூட்டினார்.

மேலும் இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் கலைஞரிடம் பாடம் படிக்க வேண்டும் என்று கூறியதுடன், அரங்கத்தில் இருந்த அனைவரையும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்தச் சொல்லி திமுக தொண்டர்களுக்கே ஆனந்த அதிர்ச்சி அளித்தார்.

இப்படி களைக்கட்டிய கலைஞர் நாணய வெளியீட்டு விழாவிற்கு பின்னால் மோடியின் அரசியல் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், பிரதமரையோ, மத்திய அமைச்சர்களையோ அழைத்தால், திமுகவை பாஜகவுடன் இணைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வார்கள் என்பதை உணர்ந்த திமுக தலைமை, கலைஞரின் நாணய வெளியீட்டு விழாவிற்கு முதலில் அணுகியது துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை தான்.

அவர் ஒப்புக்கொண்டாலும், பிரதமர் ஒப்புதல் இல்லாமல் தன்னால் வரமுடியாது என்றும், அவரது அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் 3 நாட்களாக காத்திருந்தும், தன்கருக்கு பிரதமர் மோடி அனுமதி கொடுக்கவில்லை. அதை திமுக தரப்புக்கும் கூறியிருக்கிறார் தன்கர்.

முன்னதாக ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொள்ள அப்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இதே போன்று திமுக தரப்பு அணுகியது. அப்போது 4 நாட்கள் எடுத்துக்கொண்ட மோடி, இறுதியில் அனுமதி வழங்கினார்.

எனினும் கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி செல்வதை விட மத்திய பாஜக அமைச்சர் செல்வது தான் நன்றாக இருக்கும் என மோடி திட்டமிட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால், மக்களவையில் பெரும்பான்மை வகித்தாலும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் தங்களுக்கு எதிராக தொடர்ந்து சீறி வரும் திமுகவின் அரசியல் ஆதரவு தேவைப்படும் என்று மோடி கருதுகிறார்.

அவர்களை கூல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் கேபினட்டில் தனக்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி சென்னை வந்த ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று செலுத்திய மரியாதையையும், கலைஞருக்கு அவர் சூட்டிய புகழாரத்தையும் கண்டு திமுகவினரே வியந்தனர் என்றால், எதிர்க்கட்சி எடப்பாடி முதல் பிரேமலதா வரை திமுக – பாஜக ரகசிய உறவு வைத்ததாக குற்றஞ்சாட்டி அரசியலாக்கி வருகின்றனர்.

இது ஒருபுறமிக்க கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலையின் நடவடிக்கையால் பாஜக கட்சியினரே சற்று அதிருப்தியில் இருக்கின்றனராம்.

ஆம் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் போது, முதல்வர் ஸ்டாலின் அண்ணாமலை முன்னாடி வந்து நிற்குமாறு அவரை தேடிக்கொண்டே இருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

விழா முடிந்த பின்னர் அமைச்சர் எ.வ.வேலுவுடனும், கார் பார்க்கிங்கில் அமைச்சர் உதயநிதியுடனும் அண்ணாமலை நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார்.

இதையெல்லாம் கண்ட பாஜகவினரே, இவ்வளவு நாட்கள் திமுக மீது அனலை வீசிக் கொண்டிருந்த அண்ணாமலை திமுக தலைவர்களுடன் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறாரே என வேதனைப்பட்டனர்.

இதுகுறித்து அண்ணாமலையிடம் கேட்டபோது, ’இந்த நிகழ்ச்சிக்கு நான் விரும்பி போகல… பாஜக தலைமையே திமுககிட்ட அறிவுறுத்தியிருக்கு. அத டி.ஆர் பாலு ஸ்டாலின் கிட்ட சொன்ன பிறகு தான் எனக்கு அழைப்பு வந்துருக்கு. அதன் பேருல நானும் கலந்துக்கிட்டேன்’னு சொல்லி சமாளித்துள்ளார்.

இதற்கிடையே தமிழக பாஜக மூத்த தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜனும், பொன் ராதா கிருஷ்ணனும், “இதை தான் நாங்கள் முதலில் இருந்து கூறி வருகிறோம். திராவிட கட்சிகளை நாம் ஒரேடியாக ஒதுக்க கூடாது. அவர்களோடு நமக்கு அரசியல் ரீதியாக எவ்வளவு எதிர்க்கருத்து இருந்தாலும், அதற்கு அப்பால் அவர்களோடு நட்பு பாராட்ட வேண்டியது அவசியம்” என்று அண்ணாமலைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் எல்லோரையும் விட, தமிழக அமைச்சர்கள் தான் ராஜ்நாத் சிங் வருகையால் அதிக சந்தோசத்தில் இருக்கிறார்கள்.

ஏன் என்றால், ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக அமைச்சர்களை குறிவைத்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலமாக மத்திய அரசு கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

இப்போது பாஜகவினர் நம்முடன் நெருக்கம் காட்டுவதால், இனி இதுபோன்று பிரச்சனைகள் இருக்காது என ஒருவருக்கொருவர் தெரிவித்து வருகிறார்களாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜக – திமுக இடையே ரகசிய உறவா? – எடப்பாடிக்கு எல்.முருகன் பதில்!

மருமகனை டாப் ஹீரோவாக்க களமிறங்கும் அர்ஜூன்… ஏழுமலை 2 பாராக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share