ஸ்டாலினை ’அண்ணா’ என்றழைத்த தேஜஸ்வி : பின்னணி என்ன?

அரசியல்

தமிழக முதல்வர் ஸ்டாலினை பிகார் துணை முதல்வர் ’நன்றி அண்ணா’ என்று அழைத்தது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்தது.

பிகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தினார். அதன்படி, நேற்று ஆளுநர் முன்னிலையில் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வர் வாழ்த்து!

பிகாரில் அமைந்துள்ள புதிய அரசுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறினார். அதில், “பிகாரின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமார், துணை முதலமைச்சகராகப் பொறுப்பேற்றுள்ள சகோதரர் தேஜஸ்விக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். பிகாரில் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த கூட்டணி வருகை நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி” என்று தெரிவித்திருந்தார்.

உறவு சொல்லி நன்றி தெரிவித்த தேஜஸ்வி

இதற்கு தேஜஸ்வி யாதவ் நன்றி தெரிவித்தார். அவரது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலினின் பதிவை டேக் செய்து, “நன்றி அண்ணா!…பிரிவினை மற்றும் எதேச்சதிகார போக்கை முன்னிறுத்தும் மத்திய அரசை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். இன்று முதல் அவர்களுக்கு பின்னடைவு தொடங்கும். அன்பான நன்றிகள்” எனத் தெரிவித்தார்.

அண்ணன் – தம்பி உறவின் ஆரம்பம்!

இதனையடுத்து இருவருக்கும் இடையிலான அண்ணன் தம்பி உறவு குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலின் – தேஜஸ்வி யாதவ் இடையிலான நட்பும், அன்பு நேற்று இன்று தோன்றியதல்ல. அது தலைமுறையாக பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. திமுக-ஆர்ஜேடி, கலைஞர்-லாலு பிரசாத் என தொடங்கி தற்போது ஸ்டாலின் – தேஜஸ்வி என தொடர்கிறது.

முன்னாள் முதல்வர் கலைஞருடன் மிகுந்த மரியாதையும், நட்பும் கொண்டவர் லாலு பிரசாத் யாதவ். சென்னை வரும்போதெல்லாம் கலைஞர் கோபாலபுரம் வீட்டிற்கும் சென்று வருவார்.

கருணாநிதி குறித்து வருத்தப்பட்ட லாலு

சீரற்ற உடல்நிலை காரணமாக 2017ஆம் ஆண்டு கலைஞரின் 94வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தப்பட்டார் லாலு.

கலைஞரின் மறைவில் பெரும் துயரமடைந்த லாலு, ”கருணாநிதியின் எதிர்பாராத மறைவு ஈடு செய்ய முடியாதது. எனது நீண்ட கால நண்பர். சமூக நீதிக்காக போராடிய சிறந்த தலைவரை, நாடு இழந்து விட்டது.” என்று தங்களது நட்பையும், கொள்கை சார்ந்த இருவரின் ஒற்றுமையையும் குறிப்பிட்டார்.

கருணாநிதி வழியை பின்பற்றுங்கள் ஸ்டாலின்!

கடந்த ஆண்டு தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, ”ஸ்டாலின் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய கலைஞர் கருணாநிதியை போன்று நீங்களும் சமூக நீதியை முன்னெடுத்து சென்று திராவிட சகோதர, சகோதரிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.” இவ்வாறு கருணாநிதியின் நண்பராக, அரசியல் வழிகாட்டியாக லாலு பிரசாத் வாழ்த்தி இருந்தார்.

சமூகநீதி குறித்த எங்கள் பார்வைக்கு தமிழகமே உந்துசக்தி!

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் லாலுவின் மகனும்,ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார். அப்போது, தனது தந்தை மற்றும் கருணாநிதிக்கு இடையே நிலவிய நட்பு குறித்தும், ஸ்டாலின் மீது கொண்டுள்ள மரியாதை, தமிழகத்தில் நிலவும் சமூகநீதி என பலவற்றைக் குறித்து பேசினார். அவர், ”தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் போன்றோரால் உருவாக்கப்பட்ட சமூக நீதி கொள்கைகள் இந்தியா முழுவதும் இன்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் சாசன உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தமிழகத்திடம் இருந்து கற்று கொள்கிறோம். தமிழகத்தின் சமூக நீதி இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் லாலு பிரசாத். அதனை எங்கள் பிகாரிலும் செயல்படுத்தினார். தமிழ்நாட்டை பார்க்கும் போது சமூக நீதி, மக்கள் ஒற்றுமை குறித்து ஆச்சரியமாக இருக்கும். தமிழ்நாடு தனித்துவமான சமூகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வகையான வளர்ச்சி குறியீடுகளிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது. சமூகநீதி குறித்த எங்கள் பார்வைக்கு தமிழகமே உந்துசக்தி.

பல வரலாற்று நிகழ்வுகளை முதல்வரின் சுயசரிதையிலிருந்து அறிந்து கொண்டேன். சமூகநீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே திராவிட மாடல். ஸ்டாலின் புத்தகம் பரவலான பார்வையை வெளிப்படுத்துகிறது. அரசியலில் இருப்பவர்களுக்கு மக்களை புரிந்துகொள்வது சவால் நிறைந்தது. சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவர, புத்திசாலித்தனம் மட்டும் போதாது, மக்களை புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் ஸ்டாலின் இந்த சமூகத்தையும், மக்களின் எண்ண ஓட்டங்களையும் புரிந்துகொண்டுள்ள ஒரு தலைவர். சரித்திரம் படைப்பவர்கள் வரிசையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்” என்று புகழ்ந்து பேசியிருந்தார்.

இந்த பின்னணியில் தான், பிகார் துணை முதல்வராக பொறுப்பேற்ற தேஜஸ்வி யாதவ்வை சகோதரன் என்ற உரிமையுடன் முதல்வர் ஸ்டாலினும், அண்ணா என தேஜஸ்வி யாதவும் அன்போடு அழைத்து கொண்டனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

உரிய நேரத்தில் மகா கூட்டணி: ஸ்டாலின் வாழ்த்து!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *