இரட்டை இலை: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொன்ன பதில் என்ன?

அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தமது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ . பன்னீர்செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இடையீட்டு மனு

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் தன்னை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரியும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும் மனுவில் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் மனு மீது மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஜனவரி 30 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் இன்று (பிப்ரவரி 2 ) உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவில், அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு 2022 ஜூலை 11-ல் நடத்திய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களை தேர்தல் ஆணையம் இன்னமும் ஏற்கவில்லை. அந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் கேள்விக்குறியானது.

அங்கீகரிக்க முடியாது

ஆகையால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உரிமை கோரும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான தமது நிலைப்பாட்டையும் இந்த மனுவில் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி இருந்தது. அதாவது, உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்குதான் நிலுவையில் உள்ளது. இப்போது வரை இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் யாருக்கும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆகையால் இரட்டை இலை சின்னம் குறித்த பிரச்சனையே எழவில்லை.

ஆணையம் முடிவு செய்யாது

அத்துடன் (ஈரோடு கிழக்கு தொகுதி) இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தால் அதை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். இதில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யாது எனவும் விவரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்புமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்த இருதரப்புமே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும். இந்த இரு அணிகளுக்குமே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாமல் தேர்தல் அதிகாரி அதை முடக்கி வைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இரட்டை இலை: மோடியை சந்தித்த எடப்பாடி தூதுவர்!

எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்!

+1
0
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *