12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 1) அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளன்று தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று (மே 1) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சிந்தாரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், 12 மணி நேர வேலை சட்ட மசோதா திருப்பப் பெறப்பட்டதாக அறிவித்தார்.
அவர் பேசுகையில் ”தமிழ்நாட்டில் பெறும் முதலீடுகளை இழுத்திட வேண்டும். அதுமட்டுமல்ல அதன் மூலமாகப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாகத் தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் தான் தமிழ்நாடு அரசால் ஒரு சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது.
இது அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்ட திருத்தம் அல்ல. சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளோடு 12 மணி நேர வேலை என்பதே இந்த சட்டத்தின் திருத்தம்.
தொழிலாளர்களை பாதுகாக்க கூடிய பல அம்சங்கள் அதில் இருந்தது. ஆனாலும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதில் சில சந்தேகங்கள் இருந்தது. அதனால் பல்வேறு கோணங்களால் அது விமர்சனம் செய்யப்பட்டது. திமுக கொண்டு வந்த சட்டத்திருத்தமாக இருந்தாலும், திமுகவின் தொழிற்சங்கமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்காக நான் அவர்களை பாராட்டுகிறேன்.
இது போன்ற பல விமர்சனங்கள் எழுந்ததால் உடனே, அமைச்சர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது.
தொழிற்சங்கத்தால் சந்தேகம் எழுப்பப்பட்ட இரண்டே நாளில் சட்ட முன்வடிவை திரும்பப் பெறுவோம் என்று அறிவித்த தொழிலாளர் தோழன் தான் திராவிட முன்னேற்றக் கழகம். விட்டுக் கொடுப்பதை நான் என்றைக்கும் அவமானமாக கருதியவன் இல்லை. அதை பெருமையாக கருதி கொண்டிருக்கிறேன்.
ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல் தான். இது குறித்த தகவல் பேரவை செயலகத்திற்கு உரிய துறையின் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வடிவு திரும்பப் பெறப்பட்டது குறித்த செய்தி பேரவை உறுப்பினர்களுக்கு செய்திக் குறிப்பு மூலம் விரைவில் தெரிவிக்கப்படும்.
தொழிலாளர் நலனில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தொழிலும் வளர வேண்டும். தொழிலாளர்களும் வாழ வேண்டும் என்பது தான் நமது கொள்கை. தொழிலாளர் உரிமைகளை காப்பதோடு, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு செய்து தரும் என்று உறுதி அளிக்கிறேன்” என்று பேசினார்.
மோனிஷா
ஓட, ஓட பாஜக மாவட்ட தலைவரை தாக்கிய இந்து மக்கள் கட்சியினர்
அஜித் பிறந்தநாளுக்கு லைகா கொடுத்த மாஸ் அப்டேட்!