இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போர் 10 ஆவது நாளாக இன்று ( அக்டோபர் 16) தொடர்கிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதன் தொடர்ச்சியாக இந்த போர் இஸ்ரேலால் அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலின் இராணுவம் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடமான காசா நகரை கடுமையாக தாக்கி வருகிறது. பொதுமக்கள் காசாவில் இருந்து வெளியேற மக்களை தொடர்ந்து வலியுறுத்தியது இஸ்ரேல் ராணுவம். உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் வெளியேறும் பாதையில் எந்த இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியிருக்கிறது. மேலும் காசா நகரத்துக்கான உணவு, குடிநீர், எரிபொருள் இணைப்பை துண்டித்துவிட்டது இஸ்ரேல் ராணுவம்.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த நடவடிக்கை பல மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தெற்கு காசாவின் சில பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகத்தைக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் எரிசக்தி அமைச்சர் காட்ஸ் அக்டோபர் 15 ஆம் தேதி தெரிவித்தார்.
பாலஸ்தீன அதிபருடன் பேசிய அமெரிக்க அதிபர்
களத்தில் இப்படி என்றால் சர்வதேச அரசியலும் பாலஸ்தீனத்தை மையமாக வைத்து நடந்துகொண்டிருக்கிறது. போரில் இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவை அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அக்டோபர் 14 ஆம் தேதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அதிபர் பிடன் பாலஸ்தீனிய அதிபர் அப்பாஸுடன் பேசினார். இஸ்ரேல் மீதான ஹமாஸின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்த பிடன், பாலஸ்தீன மக்களின் கண்ணியம் மற்றும் சுயநிர்ணய உரிமைக்காக ஹமாஸ் நிற்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
அப்போது பாலஸ்தீனிய மக்களுக்கு, குறிப்பாக காசாவில் அவசரமாக தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை கொண்டு வருவதற்கான சூழல் குறித்து பிடனுக்கு அப்பாஸ் விளக்கினார். அப்போது அமெரிக்க அதிபர் பிடனும், காசாவில் உள்ள குடிமக்களுக்கு மனிதாபிமான பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை, எகிப்து, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் பிறவற்றுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்க முயற்சிகளை பாலஸ்தீனத்துடன் பகிர்ந்துகொண்டார்.
மேலும் இந்த போர் விரிவடையாமல் தடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளையும் பாலஸ்தீன அதிபர் அப்பாஸிடம் தெரிவித்தார் பிடன்” என்று குறிப்பிட்டிருந்தது.
பாலஸ்தீனத்தின் பிரதிநிதி ஹமாஸ் அல்ல…-அமெரிக்காவை எதிரொலித்த அப்பாஸ்
அக்டோபர் 14 ஆம் தேதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸுடன் அமெரிக்க அதிபர் பேசிய நிலையில்… அக்டோபர் 15 ஆம் தேதி பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் கூறிய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
ஹமாஸ் இஸ்லாமியக் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் பாலஸ்தீன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதை அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான WAFA தெரிவித்துள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுடன் ஒரு தொலைபேசி அழைப்பில், பாலஸ்தீன விடுதலை அமைப்புதான், பாலஸ்தீன மக்களின் ஒரே சட்டபூர்வமான பிரதிநிதி என்று அதிபர் அப்பாஸ் கூறியதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், “இரு தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். இரு தரப்பிலும் உள்ள பொதுமக்கள் மற்று கைதிகளை விடுவிக்க அப்பாஸ் அழைப்பு விடுத்தார்” என்றும் அந்த செய்தி நிறுவனம் மேலும் கூறியது.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘பாலஸ்தீனத்தின் பிரதிநிதி ஹமாஸ் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையே இப்போது பாலஸ்தீன அதிபரும் எதிரொலித்துள்ளார்.
சவுதி இளவரசரை சந்தித்த அமெரிக்க அமைச்சர்
மேலும் அக்டோபர் 15 ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளங்கின் ரியாத் நகரில் சவுதி அரேபிய இளவரசர் முககது பின் சல்மானை சந்தித்து இஸ்ரேல் போர் குறித்து பேசியிருக்கிறார்.
இவ்வளவு சர்வதேச அரசியல் முயற்சிகளுக்கு இடையிலும் காசாவில் மக்கள் ஒவ்வொரு நாளும் குண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…