மோடி படத்தில் கருப்பு மை பூசிய தபெதிகவினர் விடுதலை!

அரசியல்

பிரதமர் மோடி படத்தைக் கருப்பு மையால் அழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தபெதிகவினர் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டனர்.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு இடங்களிலும் விளம்பர பேனர்களை வைத்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக இந்த போட்டி நடைபெறும் நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படம் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை. இந்நிலையில் பாஜகவினர் செஸ் விளம்பர பேனர்களில் மோடியின் படத்தை ஒட்டி வருகின்றனர். அந்தவகையில் பிரதமரின் புகைப்படம் ஒன்றை சென்னை அடையாறு பகுதியில் உள்ள விளம்பரத்தின் மீது ஒட்டியிருந்தனர்.
அதன் மீது, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பு மை பூசி அழித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சசிகுமார், சாரதி, அரவிந்தன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதுவொருபுறமிருக்க செஸ் விளம்பரங்களைச் சேதப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் கழக வழக்கறிஞர் துரை அருண் என்பவர் புகார் அளித்தார்.
இதனிடையே தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், “பிரதமர் மோடியின் படத்தைக் கருப்பு மை கொண்டு அழித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்த சென்னை காவல்துறையினர் தமிழக அரசு விளம்பரத்தின் மீது பிரதமரின் மோடியின் படத்தை அத்துமீறி ஒட்டி, தமிழக அரசின் விளம்பரத்தைச் சேதப்படுத்தி உள்ள பாஜகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் கைது செய்யப்பட்டுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது வழக்குப் பதியாமல் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தச்சூழலில் நேற்று இரவு கைதான மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *