வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நேற்று தமிழக அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கேரள மாநிலம், வைக்கம் சிவன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் மேற்கொண்டு, சிறையிலடைக்கப்பட்ட தந்தை பெரியார் தனது தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக 1924ஆம் ஆண்டு வெற்றி கண்டார்.
சமூகநீதி காக்கப் போராடி பெற்ற வெற்றியை நினைவு கூறும் வகையில், பெரியாருக்கு வைக்கத்தில் கடந்த 31.1.1994 அன்று நினைவிடம் திறக்கப்பட்டது.
இதில் பெரியாரின் 4 அடி உயரத் திருவுருவச் சிலையும், அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் பொது மக்களின் பார்வைக்காக நிரந்தர புகைப்படக் கண்காட்சியும், பெரியார் புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் அடங்கிய நூலகம், பூங்கா ஆகியவை உள்ளன.
இந்த நினைவிடத்தை நேற்று (ஜனவரி 23) தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக, பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்படக் கண்காட்சிக்கூடம், நூலகம், பார்வையாளர் மாடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றை புனரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அமைச்சர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “தந்தை பெரியார் 1924ஆம் ஆண்டு மாபெரும் போராட்டத்தை இங்கே நடத்தினார். ஈழவர்கள், புலையவர்கள் தெருக்குள்ளே போகக் கூடாது என்ற நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகப் போராட்டம் நடைபெற்றது.

குறிப்பாக, இந்த பகுதியைச் சேர்ந்த கே.பி. கேசவமேனன் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த மகாத்மா காந்திக்கு, “இங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் சிறைக்குப் போய்விட்டோம். இனி இந்த போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு யாரும் இல்லாத நிலை உள்ளது” என்று கடிதம் எழுதினார்.
அதற்கு மகாத்மா காந்தி, “வடபுலத்திலிருந்து அனுப்புவதற்கு எங்களிடத்தில் யாரும் தலைவர்கள் இல்லை. அருகில் தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் தலைவர் இருக்கிறார். அதுவும் இதே நோக்கமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். அவர் இந்த போராட்டத்திற்குப் பொருத்தமானவர்” என பெரியாரைக் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு மகாத்மா காந்தி தந்தை பெரியாரைத் தொடர்பு கொண்டு இப்படி ஒரு போராட்டம் நடைபெறுகிறது என்று அவருக்கு நினைவில் கொண்டு வந்ததன் அடிப்படையில் 1924 ஆம் ஆண்டு பெரியார் வைக்கத்திற்கு வந்தார்.
இந்தப் போராட்டம் அந்த காலத்தில் தமிழகத்திலும் கேரளாவிலும் பேசப்பட்ட மாபெரும் போராட்டம். இந்தப் போராட்டத்தால் இரண்டு முறை பெரியார் சிறைக்கு சென்றார்.
அந்த நினைவை போற்றுகிற வகையில் நாட்டு மக்களுக்கும் எதிர்கால இளைஞர்களுக்கும் இந்நிகழ்வினை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு ஏற்கனவே 1984 இல் எழுதப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் கேரள அரசின் சார்பாக சுமார் 70 சென்ட் இடத்தை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் தான் இந்த நினைவகம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து 1984இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1994 ஆம் ஆண்டு இந்த கட்டிடம் திறக்கப்பட்டது.
இதனுடைய மொத்த பரப்பளவு 700 சதுர அடி ஆகும். பெரியார் இந்த மண்ணுக்கு வந்து போராடியது அடுத்த ஆண்டுடன் நூறு ஆண்டுக் காலம் முடிவடைகிறது.
இதை மனதில் வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது இங்கு என்ன நிலை இருக்கிறது என்பதற்காக எங்களை அனுப்பி, இந்த நினைவகத்தின் நிலை எப்படி இருக்கிறது? புனரமைக்கலாமா ?அல்லது புதிதாகக் கட்டலாமா என்பது குறித்து துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்யச் சொன்னார்.
அதன்படி ஆய்வு மேற்கொண்டோம். இது தொடர்பான ஏனைய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறினார்.
பிரியா