அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கில், புலன் விசாரணை அதிகாரியிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தங்கம் தென்னரசுவின் மனைவி சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜரானார்.
அப்போது அவர், “இந்த வழக்கு உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டது. வழக்கின் மேல் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வழக்கை முடித்து போலீசார் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதை மறுஆய்வு செய்ய அவசியமே இல்லை.
இவ்வழக்கில் முதலாவதாக தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சொத்துகளின் அளவுக்கும், மேல் விசாரணைக்கு பின் அறிக்கையில் கூறியுள்ள சொத்துகளின் அளவுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
முதல் அறிக்கையில் சேமிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளது. இதில் வாடகை, விவசாய வருவாய் கணக்கில் கொள்ளப்படவில்லை. இறுதி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் செலவு கணக்குகளும் முறையாக கணக்கிடப்படவில்லை.
மேல் விசாரணையின் அறிக்கையை ஏற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்தது. முதல் அறிக்கையில் திருப்தி ஏற்படாத காரணத்தால் மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த இரு அறிக்கைகளில் எதை ஏற்றுக்கொள்வது என்பது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது” என வாதிட்டார்.
இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தங்கம் தென்னரசு, அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு மேல் விசாரணை நடத்த அனுமதி கோரிய புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்பதால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் ’என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
அதன்படி வழக்கு இன்று (பிப்ரவரி 29) விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் ஆஜரானார்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி, “ஆட்சி மாற்றத்துக்கு பின் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை எப்படி நியாயமான விசாரணையாக கருத முடியும்.
வழக்கில் முதல் புலன் விசாரணை அதிகாரி சேகரித்த ஆதாரங்களை மாற்றாமல், கூடுதல் ஆதாரங்களை சேர்ப்பது மறு விசாரணை கிடையாது. அது, மேல் விசாரணை ஆகும். இந்த விசாரணை காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதல் பெற்றே நடைபெற்றது.
மேல் விசாரணைக்கு பின், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எந்த தடையும் இல்லை” என்று கூறி வாதத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை அழைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “எத்தனை ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு பிரிவில் சட்ட வழக்குகளை விசாரிக்கிறீர்கள்” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், “7 ஆண்டுகளாக சட்ட வழக்குகளை புலன் விசாரணை செய்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இந்த காலக்கட்டத்தில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்தியிருக்கிறீர்களா?
2016ஆம் ஆண்டு விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என பதில் மனு தாக்கல் செய்யும் போது, மேல் விசாரணை நடத்த தோன்றவில்லையா?
2021ல் திடீரென மேல் விசாரணை செய்ய வேண்டுமென தோன்றியது ஏன்?” என கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து, விசாரணை அறிக்கையில் 6 தீர்ப்புகள் மேற்கோள்காப்பட்டிருக்கிறது. இதை ஒவ்வொன்றையும் விளக்குமாறு கேட்டார்
அது தெரியாது என்று அதிகாரி பூமிநாதன் பதிலளிக்க, ”இது உங்கள் விசாரணை அறிக்கையில் தானே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது உங்களுக்கு தெரியாதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதே நடைமுறையை சாதாரணமானவர்களின் வழக்குகளிலும் பின்பற்றுவீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு தலைமை வழக்கறிஞர் வாதத்துக்காக வழக்கு விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, தினமும் மாலை 6 மணி வரை வழக்குகளை விசாரிக்கும் போதுதான், ஒரு நாள் முழுவதும் வேலை செய்த உணர்வு ஏற்படுகிறது” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
ஐபிஎல் தொடரில் அதிக ‘தோல்விகளை’ சந்தித்த கேப்டன்கள்