“அமைச்சரவை கூட்டத்தில் ரூ.44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல்” – தங்கம் தென்னரசு பேட்டி!

Published On:

| By Selvam

அமைச்சரவை கூட்டத்தில் ரூ.44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, “முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  அமைச்சரவை கூட்டத்தில்  சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் ரூ.44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 24,700 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

வாகன உற்பத்தி, மின்னணு பொருள்கள், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூறுகள் ஆகிய தொழில்கள் குறித்த முதலீடுகள் இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி சிப்காட் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வெல்லமடுகால் பகுதியில் ரூ.706.5 கோடி மதிப்பீட்டில் பாக்ஸ்கான் நிறுவனத்தில் 18,720 படுக்கைகள் கொண்ட தொழிலாளர்கள் தங்கும் கட்டிடத்தை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் செம்ப்கார்ப் நிறுவனம் புதிய தொழிற்சாலை அமைக்க உள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் எரிசக்தி துறையின் மூன்று முக்கியமான கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீரேற்று புனல்மின் திட்டம், தமிழ்நாடு சிறுபுனல் மின்திட்டம்,  காற்றாலை மின் உற்பத்திக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பிற்கான கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கைகளுக்கு பல்வேறு சலுகைகளையும் கட்டணங்களையும் நாம் வழங்கியிருக்கிறோம். இந்த திட்டத்தின் மூலம் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். காற்றாலைகளை புதுப்பிக்கக்கூடிய இந்த கொள்கையின் மூலம் ஏறத்தாழ 25 சதவிகிதம் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வருகிறது என்பதை விட எவ்வளவு வேலைவாய்ப்புகள் வருகிறது என்பதில் தான் முதல்வர் கவனமாக இருப்பார்.

அந்தவகையில், தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவரது வெளிநாடு பயணம் இருக்கும். வெளிநாடு பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வினேஷ் போகத்திற்கு பதக்கம் கிடைக்குமா?

“பதவிக்காலம் முடிந்தும் ஆளுநர் பதவியில் தொடர்வது ஏன்?” – தேநீர் விருந்தை புறக்கணித்த காங்கிரஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share