செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தை தமிழக அரசு நிராகரிக்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “செந்தில் பாலாஜியை நீக்கியதற்கான காரணம் குறித்து ஆளுநர் அளித்த கடிதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் அனுப்ப உள்ளார்.
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அமைச்சரை நியமிப்பதும் அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தை ஆளுநர் மீறியிருக்கிறார். தேவைப்பட்டால் ஆளுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு முன்பாக ஆளுநர் யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. அவசரகதியில் ஆளுநர் அனுப்பிய கடிதத்தை தமிழக அரசு நிராகரிக்கிறது. முதல்வரின் அறிவுறுத்தல் இல்லாமல் ஆளுநர் அமைச்சரை நீக்க முடியாது.
ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட காரணத்தினால் மட்டுமே அவரை அமைச்சர் பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்ய முடியாது. மத்திய அமைச்சர்கள் 11 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அதிமுக அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க ஆளுநர் தீவிரம் காட்டுகிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
மெட்ரோவில் ஜாலியாக ரைடு சென்ற பிரதமர்
“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது” – ஜெயக்குமார்