“பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாடு பல மடங்கு தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும்” என தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 20) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாடு பல மடங்கு தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும். 2028க்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லையெனில், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியின், தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி தேக்கமடையும்.
புதிய விமான நிலையம், அடுத்த 30-35 வருடங்களுக்கான எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும். நிலங்கள், பரப்பு, நில அமைப்பு மற்றும் சமூகப் பொருளாதார காரணிகளை கருத்திற்கொண்டு, பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
புதிய விமான நிலையம் அமைய உள்ள சுற்றுவட்டார பகுதியை மேம்படுத்த உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும். குழுவின் பரிந்துரைகளின்படி, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில், பொது மக்கள் வசிக்கும் நிறைய குடியிருப்புகளும் கட்டடங்களும் நிறைந்திருப்பதாலும், நிலத்தின் மதிப்பு மிக அதிக அளவில் இருப்பதாலும், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினமாகும்.
சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மட்டுமின்றி, தென்னிந்திய மாநிலங்களின் வளர்ந்து வரும் வணிகம், வர்த்தகம், தொழில்கள், சுற்றுலா, விமான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சென்னைக்கு அருகில் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
மேலும், சென்னையுடன் தமிழ்நாட்டின் இதர நகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைப்பதற்கும், உலக வளர்ச்சியுடன் இணைந்து செயல்படுவதற்கும், புதிய விமான நிலையத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். பரந்தூரில் உள்ள நீர்வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி, தமிழ்நாடு அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும்.
விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தைவிலையைவிட, கூடுதலாக மிகவும் திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும். புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதால் நேரடி வேலைவாய்ப்புகளும் மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தொடர்ந்து செயல்படும். ” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
பரந்தூர் விமான நிலைய கருத்துக் கேட்பு கூட்டம்: அமைச்சர்கள் தாமதம், மக்கள் புறக்கணிப்பு!