தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து பேசியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று(ஜனவரி 27) தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் கடந்த 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
இன்று, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, மற்றும் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, ஆகியோருடன் இணைந்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை புது டெல்லியில் நேரில் சந்தித்து, இத்திட்டத்திற்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (MGNREGA) உள்ள 100 நாள் வேலை, 150 நாளாக உயர்த்தப்படும் என்றும்; சம்பளம் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும்; 100 நாள் வேலை திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு இதுவரை இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புத்தாண்டு பிறந்த ஜனவரி மாதத்தில், பல மாவட்டங்களில் இந்த ஸ்டாலின் மாடல் அரசால் இதுவரை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை.
100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் கடந்த இரண்டு மாதங்களாக வழங்கவில்லை.
எனவே, சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், மீண்டும் அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்று ட்விட்டர் வாயிலாக பதிலளித்திருந்தார்.
தொடர்ந்து இன்று ஒன்றிய நிதியமைச்சரை சந்தித்துள்ளார்.