சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 6) இடைக்கால தடை விதித்துள்ளது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றம் இருவரையும் விடுவித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது செல்லாது என்று தெரிவித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திக்கு உத்தரவிட்டார்.
விசாரணையின் போது அமைச்சர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” எனவும் தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மனுவில், “சொத்துக்குவிப்பு வழக்கில் விரிவாக விசாரணை நடத்திய பின்னர் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதை கருத்தில் கொள்ளாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அமைச்சர்கள் கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று (செப்டம்பர் 6) உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அவரது மனைவி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், அவரது மனைவி சார்பில் மூத்த வழக்கறிஞர் முரளிதர் ஆகியோர் ஆஜராகினர்.
மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, விக்ரம் சவுத்ரி ஆகியோரும் ஆஜராகினர்.
தமிழ்நாடு அரசு சார்பில் அடவகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகினார். அவர், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசும் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதி ஆனந்த் வெஙகடேஷின் தீர்ப்பு தவறானது என்று கூறி சில முந்தைய வழக்குகளின் தீர்ப்பை சுட்டிக்காட்டினர்.
இதை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர். உயர் நீதிமன்ற பதிவாளரும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதுவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவுக்கு தடை விதித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு: தலைமை ஆசிரியருக்கு டிரான்ஸ்பர்!
மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும்! – ராமதாஸ்