”சாத்தான் வேதம் ஓதுவது போல”: பாஜகவை விமர்சித்த தங்கம் தென்னரசு

அரசியல்

டெல்டா காவிரி பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு ஏலம் விட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 5) தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,

“தமிழ்நாட்டின் முக்கியமான உணவு உற்பத்தி இடமாக இருக்கக்கூடிய காவிரி டெல்டா பகுதிகளில் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் மூலமாகப் பழுப்பு நிலக்கரி எடுக்க வெளியிடப்பட்டுள்ள ஏல அறிவிப்பு காவிரி டெல்டா பகுதிகளிலும் அதனை ஒட்டியுள்ள கடலூர் மாவட்ட பகுதிகளிலும் பெரும் அதிர்ச்சிகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய நிலக்கரி அமைச்சகத்தின் மூலமாக ஏலம் விடப்பட்டுள்ள 101 வட்டாரங்களில் சேத்தியாதோப்பு கிழக்கு, மைக்கல்பட்டி, வடச்சேரி உள்ளிட்ட 3 தொகுதிகள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கக்கூடிய பகுதிகள் என்பதை அறிந்தவுடன் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்க குறிப்பிட்டிருந்த பகுதிகள் காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் அதிக நெல் உற்பத்தி அளிக்கக்கூடிய வேளாண் பகுதிகள்.

மேலும் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது” என்று நேற்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தை மேற்கோள் காட்டினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலமைச்சர் கடிதம் எழுதிய உடனேயே, தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளும் நிலக்கரி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளிடம், காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 3 பகுதிகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு முதலமைச்சரின் கடிதத்திற்கு பிறகு மத்திய நிலக்கரி சுரங்க துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியை தொடர்பு கொண்டு முதலமைச்சரின் கடிதத்தில் உள்ள சாராம்சத்தை குறித்து விளக்க நேரம் கேட்டிருந்தார்.

ஆனால் அவர் வெளியூர் சென்றிருந்த காரணத்தால் தொலைப்பேசி வாயிலாகவே விளக்கம் கொடுத்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவந்துள்ளார்கள்.

எனவே கடிதம் எழுதுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் அனைத்து வகையிலும் இந்த பிரச்சனையில் தமிழ்நாட்டின் நிலையை எடுத்துச் சொல்லி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள வேளாண் விளைநிலங்களில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது, 2006 -ஐ பற்றியெல்லாம் பேசியிருந்தீர்கள். ஆனால் நீங்கள் கொண்டுவந்திருக்கக்கூடிய சட்டத்தில் எதையெல்லாம் விட்டு விட்டுக் கொண்டுவந்தீர்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அந்த சட்டம் இந்த அவையில் கொண்டு வரும் போது, நீங்கள் இருக்கக்கூடிய எதிர்க்கட்சியில் இருந்து நான் தான் அந்த சட்ட முன்மொழிவின் மீது பேசினேன்.

அன்றைய வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் அதற்குப் பதில் சொன்னார்கள். மேலும், அதே பதிலைத் தான் உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்களுக்கும் நான் சொல்ல விரும்புகின்றேன்.

சாத்தான் வேதம் ஓதுவது போல, தனியாருக்குக் கொடுப்பது பற்றியெல்லாம் பாஜக பாடம் நடத்துகிறதே என்பதை தான் நான் பார்க்கிறேன். கொஞ்சம் ஒரு விரலை மற்றவர்களை நோக்கி நீட்டும் போது 3 விரல்கள் நம்மை நோக்கி இருக்கும் பார்த்தால் தனியாருக்குத் தாரை வார்ப்பது பற்றியெல்லாம் நாம் பேசுகிறோமே என்பது தெரியவரும்.

இறுதியாக எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியங்களாக நமக்கு உணவளிக்கக்கூடிய அன்னை பூமியாக இருக்கக்கூடிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் ஒருபோதும் இதுபோன்ற திட்டங்களைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது” என்று பேசினார்.

மோனிஷா

’நானும் ஒரு டெல்டாக்காரன்’-நிலக்கரி சுரங்க விவகாரத்தில் ஸ்டாலின் உறுதி!

கரன்ட்டை விட சோறுதான் முக்கியம்: நிலக்கரி விவகாரத்தில் வானதி

thangam thennarasu in assembly
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *