ஆளுநர் மீது வழக்கா? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!

அரசியல்

தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்களுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(ஜூன் 6) விளக்கம் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் ‘உயர் கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று (ஜூன் 5)நடைபெற்றது.

இதில் பேசிய ஆளுநர் ரவி, இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காலத்திற்கேற்ற கல்வி கிடைக்காததால் இளைஞர்களின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. பொறியியல், அறிவியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருந்தார்.

மேலும், முதலீட்டாளர்களை கவரக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்றார். வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிடமாட்டார்கள் என்றும் அவர்கள் கடுமையாக பேரம் பேசுபவர்கள் என்றும் கூறினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக தலைவர்களும் கூட்டணி கட்சித்தலைவர்களும் ஆளுநர் கூறிய கருத்துக்களுக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, துணைவேந்தர்களை அழைத்து ஆளுநர் அரசியல் பேசியது ஏற்க முடியாது என்று கூறினார்.

மேலும், ஆளுநர் ரவி அத்துமீறி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழ்நாட்டின் கல்வியில் அதன் தரத்தில் குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் உள்ள டாப் 100 பல்கலைக்கழங்களில் 26 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

டாப் 100 கல்லூரிகளில் 30 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள்,கலை அறிவியல் கல்லூரிகளின் தரம் சிறப்பாக உள்ளது.

மோடியையே விமர்சனம் செய்கிறாரா ஆர்.என்.ரவி?


வெளிநாடு சென்று வந்தால் முதலீடு வந்து விடுமா என்று ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரதமர் மோடி இப்போதும் முதலமைச்சராக இருந்த போதும் வெளிநாட்டு பயணம் சென்று வந்துள்ளார்.

மோடி அடிக்கடி வெளிநாட்டு பயணம் செல்வதை ஆளுநர் விமர்சனம் செய்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதாகவும் கொரோனா காலத்தில் கூட அதிக முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

மேலும், ரூ.1.87 லட்சம் கோடி முதலீட்டின் மூலம் 1.95 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4.39 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக அதிகரித்துள்ளது. சிறு, குறு நடுத்த தொழில் நிறுவனங்களில் 47 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர் . தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பே கிடைப்பதில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதற்கு கண்டனங்கள் என்று கூறினார்.

மேலும் , ”தொடர்ந்து எதிர்மறையாக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஏன் வழக்கு தொடர கூடாது?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அமைச்சர், ”ஆளுநர் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆளுநர் ரவி மீது வழக்கு தொடரும் எண்ணம் எதுவும் இல்லை. அவர் அரசியல் செய்ய வேண்டாம் என்பதே எங்கள் விருப்பம்” என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கம் கண்டெடுப்பு!

ஒடிசா ரயில் விபத்தின் உண்மையான பின்னணி: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *