ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Published On:

| By Kavi

Supreme Court Notice to OP Ravindranath

ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 20) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகனும் தேனி மக்களவை தொகுதி எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 6ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

இவ்வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக இந்த உத்தரவை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த  ‘செல்லாது’ என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதன் காரணமாக ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.யாக தொடர்கிறார். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் ஓ.பி.ரவீந்திரநாத் வேட்புமனுவில் சொத்துவிவரங்களை மறைத்து தவறான தகவலுடன் தாக்கல் செய்திருக்கிறார். வேட்புமனு விவகாரத்தில் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று அறிவித்தால் மட்டும் போதாது. அவர் செய்தது கிரிமினல் குற்றம் என்பதால் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இது அரசியல் விவகாரம் என்பதால் முதலில் விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.

இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வன் சார்பில், “ரவீந்திரநாத் தன்னுடைய சொத்து விவரங்களை முழுமையாக வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. சொத்து விவகாரம் குறித்து தனியாக விசாரிக்கப்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வேட்பாளர்கள் சொத்து மதிப்பை முழுமையாக பதிவு செய்ய வேண்டும். இந்த விதியின் படி அவர் சொத்து விவரங்கள தாக்கல் செய்யவில்லை.

இது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதால் தனியாக மனுத் தாக்கல் செய்துள்ளோம்” என்று வாதிடப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்த வாதத்தை தொடர்ந்து இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் விவகாரம் புதிய கோணத்தில் அணுகப்பட்டிருக்கிறது. இந்த மனுவில் இருந்து புதிய விஷயத்தை தாங்கள் தெரிந்து கொண்டிருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அதோடு தங்க தமிழ்ச் செல்வன் மனு மீது பதிலளிக்க ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரியா

செந்தில் பாலாஜிக்கு 9ஆவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

எங்கிருந்து குண்டு வரும்?   எங்கிருந்து தூக்கம் வரும்?  காசாவில் இருந்து பெண் பத்திரிகையாளரின் அனுபவம்!

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இல்லை: ஜெய் ஷா விளக்கம்!