விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாருக்கு இன்று(ஏப்ரல் 19) மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது.
காதலுக்கு மரியாதை என்ற படத்தில் நடித்த விஜய், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி முதல் முக்கியமான ஆளுமைகளுக்கு மரியாதை செலுத்துமாறு தனது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு தமிழ்நாடு முழுதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை செய்தனர்.
இது தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. விஜய் அரசியலில் நேரடியாக ஈடுபடத் தயாராகிறார் என்று விவாதங்கள் எழுந்தன.
இந்த நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி ஈரோடு மாவட்டம் ஓடாநிலைக்கே சென்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மரியாதை செலுத்தினார்.
அப்போது ஏராளமான விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து மூன்றாவது ஆளுமையாக இன்று(ஏப்ரல் 19) பத்மஸ்ரீ விருதுபெற்ற டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 10ஆவது நினைவு தினத்தை ஒட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
“விஜய் உத்தரவின்படி, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம்.!,
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, மத்திய சென்னை, வடசென்னை, சென்னை புறநகர் மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்கள்,
அணித் தலைவர்கள், பகுதி தலைவர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்” என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ஆளுமைக்கு மரியாதை தொடரும் என்கிறார்கள் மக்கள் இயக்கத்தினர்.
-வேந்தன்
பல் பிடுங்கிய பல்வீர் சிங்: எப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?
இயற்கை அழகுடன் வனவிலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்: லிஸ்ட் இதோ!