தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இன்று(ஜூலை 11)ஆலோசனை செய்து வருகிறார்.
தன்னுடைய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை வைத்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய்.
சட்ட மாமேதை புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் விழா கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது விஜய் மக்கள் இயக்கத்தினரும் அம்பேத்கரின் சிலைக்கு பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விமரிசையாக கொண்டாடினார்கள்.
இதனிடையே, கடந்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுபொருட்களை வழங்கினார். அதோடு அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டார் நடிகர் விஜய். மேலும், காமராஜர் பிறந்த நாளையும் விமரிசையாக கொண்டாட உள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
இச்சூழலில், விஜயின் இந்த நடவடிக்கை அவர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை சேர்ந்த தன்னுடைய இயக்க நிர்வாகிகளை சென்னைக்கு வருமாறு அழைத்தார் நடிகர் விஜய்.
அந்த வகையில், இன்று (ஜூலை 11) விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தற்போது சந்தித்து வருகிறார்.
நிர்வாகிகளுடனான ஆலோசனையின் போது அரசியல் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தேஜகூ கூட்டம்: எடப்பாடிக்கு அழைப்பு!
செந்தில் பாலாஜி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு!