sankarayya 102 year old life

சங்கரய்யாவின் 102 ஆண்டுகால பெருவாழ்வு: ஒரு பார்வை!

அரசியல் சிறப்புக் கட்டுரை

சுதந்திர போராட்ட தியாகியும், தகைசால் தமிழரான மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா (102) இன்று காலமானார். sankarayya 102 year old life

கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய உருவாக்கிய 32 தலைவர்களில் ஒருவரான என்.சங்கரய்யா, தனது 102 வயதிலும் கட்சிக்காக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 7ஆம் தேதி கூட கட்சி விழாவிற்காக அவர் பதிவு செய்து அனுப்பிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது கட்சிகள் கடந்து அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்,  அவரது 102 ஆண்டுகால வாழ்க்கை, சுதந்திர போராட்டம், அரசியல் விழிப்புணர்வு, கட்சி பணிகள் குறித்து இங்கு காணலாம்.

1 தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலைவர், தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பகுதி.

2 அந்நியர் ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த சுதந்திர போர்க்களத்தில் மையப்புள்ளியாக விளங்கிய நகரங்களில் மதுரையும் ஒன்று.

3 படிப்பா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்வி மாணவரான சங்கரய்யாவின் நெஞ்சில் எழுந்தது. படிப்பை துறந்து நாட்டின் விடுதலைப் போராட்டப் பாதையை தனது வாழ்க்கை பாதையாக தேர்வு செய்தார்.

4 தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை மற்றும் மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார்.

5 மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்ட தோழர் சங்கரய்யா நாட்டுக்கு விடுதலை கிடைத்த போது தான், 1947 ஆகஸ்ட் 14ல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்…

6 கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், கட்டுப்பாட்டுக் குழு தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைவேற்றினார்.

7 தமிழகத்தின் தலைசிறந்த எழுச்சிப் பேச்சாளர். அவர் பேசுவது சிங்கம் கர்ஜிப்பது போன்று இருக்கும்.

8 ஒரு கம்யூனிஸ்ட் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தது அவரது வாழ்க்கை.

9 அர்ப்பணிப்பும் தியாகமும் தொண்டறமும் நிறைந்தது அவரது புகழ் வாழ்க்கை.

10 நரசிம்மலு-ராமானுஜம் தம்பதியின் இரண்டாவது புதல்வராக சங்கரய்யா 1922 ஜூலை 15 அன்று கோவில்பட்டியில் பிறந்தார்.

தலைவர் என்.சங்கரய்யா 11 தகவல்கள் | தலைவர் என்.சங்கரய்யா 11 தகவல்கள் - hindutamil.in

11 மாவீரன் பகத்சிங்கும் அவரது சக தோழர்கள் ராஜகுருவும் சுகதேவும் லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானதும் நாடே கொதித்து எழுந்தது. தூத்துக்குடி நகரில் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை ராஜமாணிக்கமும் சங்கரய்யாவும் கண்டனர்.

12 ஹார்வி மில்லில் பொறியாளராக பணியாற்றிய நரசிம்மலு குடும்பத்தினர் மதுரைக்கு குடிபெயர்ந்தனர்.

13 சங்கரய்யாவின் பாட்டனார் பெரியாரின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு குடியரசு ஏட்டின் சந்தாதாரராக ஆனார். அதை படித்த ராஜமாணிக்கமும் சங்கரய்யாவும் பெரியார் கூட்டத்திற்கு செல்ல துவங்கினர்.

14 விஞ்ஞான சமூக வளர்ச்சியை விவரிக்கும் அறிஞர் சிங்காரவேலரின் கட்டுரைகளை குடியரசு ஏட்டில் தவறாது படித்து வந்தனர்.

15 செயின்ட் மேரீஸ் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும் ஐக்கிய கிறிஸ்துவ உயர்நிலைப்பள்ளியில் எஸ் எஸ் எல் சி யும் முடித்து பட்டப் படிப்பிற்காக அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார்.

16 அமெரிக்கன் கல்லூரி மாணவர் மன்றத்தின் இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்றத்தின் சார்பில் ராஜாஜி, முத்துராமலிங்க தேவர், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.

17 பரிமேலழகர் தமிழ் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில் “நாடு வளர நாட்டின் வளர்ச்சிப் பாதை” என்ற தலைப்பில் சிறப்பு மிக்க உரை நிகழ்த்தினார். அதில் சிறந்த தமிழ் இலக்கிய நூல்கள் முதல் பரிசாக கிடைத்தது. அந்த கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

18 கல்லூரி கால்பந்தாட்ட அணியில் பங்கேற்று திருநெல்வேலி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியிலும் கலந்து கொண்டார்.

19 பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வடக்கு மாசி வீதியில் இருந்த சசிவர்ணத் தேவர் வீட்டில் சந்தித்தார். அவர் கல்லூரி நிலைமை, மாணவர்களின் மனநிலை உள்ளிட்ட விஷயங்களை கேட்டார்.

20 பின்னர் முத்துராமலிங்க தேவர், அவருக்கு நாட்டு நிலைமையை எடுத்துரைத்தார்.நிறைவாக ’சகோதரரே நல்லா படிங்க. நாங்க இருக்கிறோம், பார்த்துக்கொள்கிறோம்’ என்று உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார்.

CPIM Senior Most Leader Comrade N. Sankaraiah admitted in hospital

21 காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதய்யர் தலைமையில் கோயில் ஆலய நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டது. வைதீக பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். முத்துராமலிங்க தேவரை சந்தித்து ஆதரவு கேட்டனர். நுழைவை எதிர்ப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை அவர் விடுத்தார்.

22 கோயில் நுழைவு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை சங்கரய்யா உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் அம்மன் சன்னதி வாசலில் இருந்து கண்டு களித்தனர்.

23 ராஜாஜி கொண்டு வந்த இந்தித் திணிப்பை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் கருப்புக்கொடி போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. மதுரையில் தோழர் சங்கரய்யாவும் அவருடைய அண்ணன் ராஜமாணிக்கமும் பங்கேற்று ராஜாஜிக்கு கருப்புக்கொடி காண்பித்தனர்.

24 இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மறியல் போராட்டத்திலும் இருவரும் கலந்து கொண்டு ஆறு மாதகால கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்.

25 ஏ.கே.கோபாலனும் சுப்பிரமணிய சர்மாவும் கேரளாவிலிருந்து தமிழகம் வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டமைக்க முயற்சி செய்தனர். அச்சமயத்தில் மதுரைக்கு வரும்போது அமெரிக்கன் கல்லூரி விடுதியிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்வதுண்டு. அங்கு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள் குருசாமி, கே.பி.ஜானகி அம்மாள், செல்லையா, ராமநாதன் உள்ளிட்டோரிடம் தொடர்பு ஏற்பட்டது.

26 தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி “பாட்டாளி வர்க்கப் பாதை” என்ற ஆங்கில ஏட்டை வெளியிட்டது.அதனை படித்து கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களுக்கு தமிழில் கூறும் பணியை செய்து வந்தார்.

27 சுதந்திரப் போராட்ட வீச்சு காரணமாக மதுரையில் மாணவர் சங்கம் உருவானது. மதுரை ரீகல் அரங்கத்தில் நடந்த மாநாட்டில் பாரிஸ்டர் இளம் கம்யூனிஸ்ட் மோகன் குமாரமங்கலமும் சங்கரய்யாவும் உரையாற்றினர். நிறைவாக, மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார்.

28 சுதந்திரம் சமாதானம் முன்னேற்றம் என்று பொறிக்கப்பட்ட மாணவர் சங்க கொடியேந்தி அமெரிக்கன் கல்லூரியில் இருந்து துவங்கி மாசி வீதிகள் வழியாக சென்று ஜான்சிராணி பூங்காவை அடைந்து பொதுக்கூட்டம் நடத்தினர்.

29 அதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மாணவர் சங்கங்கள் உருவாக்கப்பட்டது.

தகைசால் தமிழர்: கருணாநிதி சமத்துவபுரம் கட்டினார்... சங்கரய்யா தனது வீட்டையே சமத்துவபுரம் ஆக்கினார்! | Thagaisal Tamilar Award winner N Sankaraiah lifestory and ...

30 அவரின் உத்வேகமிக்க செயல்பாட்டால் மாணவர் சங்கம் செல்வாக்கு பெறத் துவங்கியது. இதனால் அச்சம் கொண்ட கல்லூரி நிர்வாகம் சங்கரய்யாவை அழைத்து கல்லூரி மாற்றுச் சான்றிதழ் கொடுத்து விடுவதாகவும், வேறு கல்லூரிக்கு போய்விட வேண்டும் என்றும் கூறியது.

31 கம்யூனிஸ்ட் தலைவர் சுப்ரமணியர் சர்மா வழிகாட்டுதலின் பேரில் “இந்த உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடக்கும்” என்று சங்கரய்யா எச்சரித்தார். அஞ்சிய நிர்வாகம் அவரை வெளியேற்றும் உத்தரவைத் திரும்பப் பெற்றது.

32 யுத்தத்திற்கு எதிராக அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் இரண்டு நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு சங்கரய்யா தான் காரணம் என கல்லூரி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியது. அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு துண்டுப் பிரசுரம் , கல்லூரி உணவருந்தும் இடத்தில் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கல்லூரி முதல்வர் ’கல்லூரியை விட்டு வெளியேறி விடுவேன்’ என மிரட்டினார். கண்காணிப்பு தீவிரமானது.

33 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சென்ட்ரல் திரையரங்கில் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

34 மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை தோழர்கள் வி.இராமநாதன், ஏ.செல்லையா, எஸ்.செல்லையா, எஸ்.குருசாமி, கே பி ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், மாணவர் சங்கரய்யா ஆகிய ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்தது.

35 சமூக சீர்திருத்தம், கடவுள் மறுப்பு என சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டிருந்த சங்கரய்யா. தேச விடுதலை என்ற இலட்சியத்தால் தேசிய இயக்கத்துக்கு ஈர்க்கப்பட்டு, பூரண சுதந்திரம் எனும் கம்யூனிஸ்டுகளின் முழக்கமும், அவர்களிடம் ஏற்பட்ட தொடர்பும் மார்க்சியம் மட்டுமே மனித குலத்திற்கு வழிகாட்டும் என்ற புரிதல் அவரை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆவதற்கு இட்டுச் சென்றது.

36 மதுரையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி சார்பில் திருப்பரங்குன்றத்தில் 15 நாட்கள் அரசியல் வகுப்பு நடைபெற்றது. காங்கிரசுடன் இணைந்து செயலாற்றக் கூடிய சூழலை உருவாக்கியது. ஏ.கே.கோபாலன் உரையை சங்கரய்யா மொழிபெயர்த்ததுடன் இம்முகாமை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தார்.

37 அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை ஆங்கிலேய அரசாங்கத்தால் ஏவி விடப்பட்டது. இதனை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையா உடன் மாணவர் தலைவர் சங்கரய்யாவும் உரை நிகழ்த்தினார்.

38 “மண்டைகள் உடைகின்றன எழும்புகள் நொறுங்குகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தம் ஆறாக ஓடுகிறது” என ஆங்கிலத்தில் சங்கரய்யா எழுதிய துண்டுப் பிரசுரம் மாணவர்களிடம் விநியோகிக்கப்பட்டு எழுச்சி ஏற்பட்டது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதனால், வழக்கு பதிவு செய்யப்பட்டு சங்கரய்யாவை கைது செய்யப்படும் நிலைமை ஏற்பட்டது.

39 ஆங்கிலேய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. 15 நாட்களுக்கு பிறகு வேலூர் சிறைக்கு மாற்றியது. இதனால் 15 நாட்களில் தேர்வு எழுத இருந்த சங்கரய்யா படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

40 சிறையில் ஏ,பி பிரிவு என்று அரசியல் கைதிகளிடையே பாகுபாட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர்.

தகைசால் தமிழர்' விருது பெற்ற என்.சங்கரய்யாவின் 101-வது பிறந்த நாள் விழா - தலைவர்கள் நேரில் வாழ்த்து | 101st birth anniversary of Shankaraiah - hindutamil.in

41 பத்து நாட்கள் உண்ணாவிரதம் தொடர்ந்த சூழலில் ‘தாய்’ நாவலை படித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த சிறைச்சாலை ஐ.ஜி. லெப்டினன்ட் கர்னல் காண்ட்ராக்டர் “பத்து நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பின்பும் எப்படி படிக்க முடிகிறது” என்று கேட்டார். அதற்கு சங்கரய்யா “நான் நன்றாக இருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரி மாணவன்” என்று பதிலளித்தார்.

42 சிறைவாசம் என்பது ஒரு அரசியல் பள்ளியாக மாறியது. ஏராளமான அரசியல் வகுப்புகள் நடைபெற்றன. ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாக பேசும் ஆற்றல் படைத்தவராக திகழ்ந்தார்.

43 சங்கரய்யா யார் என கேட்டு தலைமை வார்டர் வந்தார். ’நான் தான்’ என்று அவர் கூறியதும், ’உங்களைத் தவிர அனைவருக்கும் விடுதலை’ என அறிவித்தார்.

44 தனிமைச் சிறையில் இருந்த அவரை வேலூர் சிறைக்கு மீண்டும் மாற்ற காமராஜர் கடிதம் எழுதி அனுப்பினார். ஒரு மாதத்திற்கு பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

45 சேலத்தில் நடைபெற்ற தென்பிராந்திய மாணவர் சம்மேளனத்தின் சிறப்பு மாநாட்டில் தமிழ்நாடு பிரதிநிதிகளுக்கு என்று தனி மாநாடு நடைபெற்றது. சங்க பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

46 சென்னை ராயப்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையூர் தோழர்களின் தூக்குத் தண்டனையை மாற்றக் கோரி ஆவேசமான உரையை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

47 மதுரையில் 1940 ஆம் ஆண்டு மே தினம் நீண்ட ஊர்வலம், வைகை ஆற்றில் பொதுக்கூட்டம் என  நடைபெற்றது. அதில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், குருசாமி, கே.பி.ஜானகி, என்.சங்கரய்யா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

48 “வெள்ளையனே வெளியேறு” முழக்கமிட்டு மதுரை கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சங்கரய்யா தலைமையில் மாபெரும் ஊர்வலத்தை நடத்தினர்.

49 திருநெல்வேலி சென்றிருந்த சமயத்தில் இந்துக் கல்லூரி, செயின்ட் சேவியர் கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்தனர். இந்நிலைமையை சமாளிக்க சேவியர் மற்றும் ஜான்ஸ் கல்லூரி சென்றார். அவர்களிடம் பேசி சுமூகமான முறையில் ஊர்வலம் நடத்த ஒப்புக் கொள்ளச் செய்தார். ஆனால், சங்கரய்யா பேச்சை மீறி, காவல்துறை கடுமையான தடியடி பிரயோகம் செய்தது. அதில் அவர் தாக்கப்பட்டு காயமடைந்தார். பல மாணவர்களின் மண்டை உடைக்கப்பட்டது.

50 இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

தமிழக அரசின் புதிய தகைசால் தமிழர் விருது! – முதலாவதாக பெறும் என்.சங்கரய்யா!

51 காங்கிரஸ்காரர்களை கம்யூனிஸ்ட்களுடன் சேர்த்து வைப்பது ஆபத்தானது என்றும், அவர்கள் காங்கிரஸ்காரர்களையும் மாற்றி விடுவார்கள் என்றும் காவல்துறை அறிக்கை கூறியது. அதனால் சங்கரய்யா கண்ணனூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

52 விவசாயிகள் இயக்கத்தை உருவாக்கியதால் கண்ணனூர் சிறையில் இருந்த 25 வயதுக்கு உட்பட்ட அப்பு, குஞ்ஞம்பு நாயர், சிறுகண்டன், அபூபக்கர் ஆகிய நால்வரும் தூக்குத் தண்டனைக் கைதி கொட்டடியில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

53 1956 இல் குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டதன் வெற்றி விழா 2 நாள் நடந்தது. 2 நாள் விழாவிலும் சங்கரய்யா சிறப்புரையாற்றினார்.

54 மதுரை, வேலூர், கண்ணனூரை தொடர்ந்து தஞ்சாவூர் சிறையில் அடைக்கப்பட்டார். வழிநெடுக வரவேற்புடன் தஞ்சை வந்து சிறையில் குடியரசு தின கொண்டாட்டம் நடத்தினார்.

55 தோழர் பி.இராமமூர்த்தி பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

56 மதுரை மக்களை ஈர்க்கும் வகையில் கும்பத்தின் உச்சியில் செங்கொடி கட்டப்பட்டு கரகாட்டம் நடத்தப்பட்ட பின்னர் தெருமுனைப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு உண்டியல் வசூலும் நடைபெற்றது.

57 “செங்கொடி என்றதுமே எனக்கு ஜீவன் பிறக்குதம்மா அது எம்கொடி என்றதுமே”, “புகழ் வளர் இந்திய நாடே பிறிதொன்று எமக்கில்லை ஈடே”,  “காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக்கு கூழுமில்லை”. என்று மக்கள் மத்தியில் கலை இலக்கிய ரீதியில் எழுச்சிப் பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

58 காங்கிரஸ்காரர்களின் நிந்தனை பிரச்சாரத் தாக்குதலைச் சந்திக்க “ஓங்கிப் பிடித்தால் செங்கொடி; திருப்பி அடித்தால் தடியடி” என்ற முழக்கம் எழுப்பட்டது.

59 1945 டிசம்பரில் மதுரையில் நடந்த தமிழ்நாடு தொழிற்சங்க காங்கிரஸ் மாநாட்டு ஏற்பாடுகளை செய்து வந்த நேரத்தில் தந்தை மரணச் செய்தி கேட்டு வீட்டிற்கு திரும்பி இறுதி நிகழ்வு ஏற்பாடுகளை செய்தார். எம்.ஆர்.வி உட்பட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

60 இந்திய கம்யூனிஸ்ட் அரசியல் தலைவர்களில் ஒருவரான பி.சி.ஜோஷி தமிழகம் சுற்றுப்பயணம் செய்தபோது, மதுரையில் அவரது உரையை சங்கரய்யா தமிழாக்கம் செய்தார். இக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

Marxist Communist leader N Sankaraiah birthday special article

61 1946இல் இந்தியாவை உலுக்கிய கடற்படை எழுச்சிக்கு ஆதரவாக மதுரையில் வேலை நிறுத்தம் நடந்தது. ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள மணல்மேட்டிற்கு செல்லும் போது காவல் துறை அதிகாரி துப்பாக்கியைக் காட்டி தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். இதைக்கண்ட சங்கரய்யா சுடுவதானால் சுட்டுக்கொல் என்று எச்சரித்தார். அதனால் இனி தன் பயமுறுத்தல் பலிக்காது என்று அதிகாரி நின்றுவிட்டார்.

62 ஹார்வி மில் பஞ்சாலை சங்க அங்கீகாரம், உணவு தானிய வகைகளை கைப்பற்றி விநியோகித்தது ஆகியவற்றின் விளைவாக மதுரை சதி வழக்கு போடப்பட்டது. இதில் பி.ராமமூர்த்தி முதல் எதிரி, சங்கரய்யா இரண்டாவது எதிரி.

63 காவல்துறை கைவிலங்கு போட முயற்சிக்க “யாருக்கும் கைவிலங்கு போடக் கூடாது” ஆவேசமாக தடுத்து நிறுத்தினார்.

64 பொய் வழக்கு என்று நீதிபதி ஹசீம் 1947 ஆகஸ்ட் 14 அன்று இரவு சிறைக்கு வந்து விடுதலை செய்தார். விடுதலை பெற்று வந்து, மதுரை திலகர் திடலில் போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் கொண்டாடினார்.

65 1947 செப்டம்பர் 18 அன்று ஆசிரியை நவமணி அம்மையாரை சாதி மத மறுப்பு திருமணம் செய்து கொண்டார். மதுரை கட்சி அலுவலகத்தில் நடந்த திருமணத்துக்கு பி.ராமமூத்தி தலைமை வகித்தார். சந்திர சேகர், சித்ரா, நரசிம்மன் ஆகியோர் பிறந்தனர்.

66 1948 இல் கட்சியின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டு வந்த போது கட்சி தடை செய்யப்பட்டதால் தலைமறைவாக இருந்து இரண்டு ஆண்டுகள் மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்டார்.

67 தலைமறைவு காலத்தில் சலவைத் தொழிலாளி மருதை என்பவரின் வீட்டில் தங்க வேண்டி இருந்தது. அழுக்குத் துணி மூட்டைகள் நடுவில் இருந்ததால் கடும் சொறி சிரங்கு தொல்லை ஏற்பட்டது. அதனால் வேதனையோடு சென்னை சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

68 மூன்று ஆண்டுகால தலை மறைவுக்குப்பின் 1951ன் துவக்கத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

69 விடுதலை அடைந்த பிறகு மதுரைக்கு வந்து கட்சி தோழர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி பணிகளை முன்னெடுத்தார்.

Marxist Communist leader N Sankaraiah birthday special article

70 முதல் பொதுத் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பி.ராமமுர்த்தி, திண்டுக்கல்லில் ஏ.பாலசுப்பிரமணியம், வேடசந்தூரில் மதனகோபாலும் போட்டியிட்டனர் . மூன்று தொகுதிக்கும் சென்று சங்கரய்யா தேர்தல் பணிகளை துரிதப்படுத்தினார்.

71 சிறையில் இருந்த பி.ராமமுர்த்தி, வேடசந்தூர் மதன கோபால் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

72 கட்சி மீது தடை நீங்கிய பின் கோவை பேரூரில் நடந்த மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

73 கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாட்டை சங்கரய்யாவை மாவட்டச் செயலாளராக கொண்ட மதுரை மாவட்டக் குழு திட்டமிட்டு செயல்பட்டு சிறப்பாக நடத்தியது. மாநாடு லட்சக்கணக்கான பேர் பங்கேற்ற பேரணியுடன் நிறைவுற்றது. இந்த மாநாட்டில் தான் கட்சியின் திட்டமும், கொள்கை அறிக்கையும் தீர்மானிக்கப்பட்டது.

74 1954 இல் மாநில செயற்குழுவின் பணிகளுக்காக சென்னைக்கு சென்றார். காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும், ஹைட்ரஜன் குண்டுகளை தடை செய்வோம் என இரண்டு பிரசுரங்களையும் எழுதினார்.

75 தேசியக் கவுன்சில் உறுப்பினராக 1956 இல் பாலக்காட்டில் நடந்த நான்காவது கட்சிக் காங்கிரசில் தேர்வு செய்யப்பட்டார்.

76 இந்திய-சீன மோதலின்போது நாடு முழுவதும் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான வதந்திகள் கிளப்பி விடப்பட்டது. அப்போது கைது செய்யப்பட்டு ஆறு மாத காலம் சிறைவாசத்துக்குப் பிறகு ஆட்கொணர்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.

77 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் கூடிய தேசிய கவுன்சிலில் கருத்து மாறுபாடு ஏற்பட்டதால் 32 தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

78 ஏழாவது கட்சி காங்கிரஸ் ஆந்திர மாநிலம் தெனாலி நகரில் சிறப்பாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது.

79 அக்டோபர் மாதத்தில் கட்சியின் மாநில மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
1964 இல் கொல்கத்தாவில் நடந்த ஏழாவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

80 தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒடுக்க காங்கிரஸ் மத்திய அரசு கடும் கைது நடவடிக்கை மேற்கொண்டது.இதனால் கைது செய்யப்பட்டு 16 மாத சிறைவாசத்துக்கு பிறகு விடுதலையானார்.

sankarayya 102 year old life

81 1966 மத்தியில் அனைவரும் விடுதலையாகி வந்த பின் தீக்கதிர் வார ஏடு கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக அறிவிக்கப்பட்டு என்.சங்கரய்யா அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

82 1967ல் மதுரை மேற்கு தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் குழுவின் துணைத் தலைவராக செயல்பட்டார்.

83 1977, 80 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டார்.

84 கடலூரில் நடைபெற்ற பதினைந்தாவது மாநில மாநாட்டில் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

85 2002 பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற 17 ஆவது மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். அதையடுத்து அவரது ஏழாண்டு சேவையைப் பாராட்டி மாநாடு தீர்மானம் நிறைவேற்றியது.

86 தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஒன்றிய அரசை எதிர்க்கும் மாற்றுப்பாதை, குடிநீர், பிரச்சனை, ரேஷன் வினியோகம், பொருளாதாரக் கொள்கைகள், மாநில சுயாட்சி, விவசாயம், கைத்தறி, கிராமப்புற வறுமை, நில விநியோகம், காடுகள், தொழிற்சாலைகள், திட்டங்கள், நுழைவு வரி, மோட்டார் வாகன வரி என எழுப்பிய பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்…

87 தலித் மக்கள் மீதான தாக்குதலை தடுத்திட, தீண்டாமை கொடுமையை ஒழித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியதுடன், தமிழக அரசு சார்பில் 1997 செப்.1 இல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்த வைத்ததில் மிக முக்கியமான பங்கு உண்டு.நிலச்சீர்திருத்தம் செய்வதன் மூலமாக தீண்டாமை முற்றாக ஒழிக்கும் என எடுத்துரைத்ததோடு, அனைவருக்கும் ஒரே சுடுகாடு என்ற கோரிக்கையை அமலாக்க வலியுறுத்தினார்.

88 1997 இல் திருச்சி பெரியார் கல்லூரி ஆண்டு விழாவில் பேசும்போது, சிறந்த தமிழர்களாக, சிறந்த தேச பக்தர்களாக மாணவர்கள் திகழவேண்டும். தீண்டாமைக் கொடுமை, சாதிக் கொடுமை, வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

89 மதவாத,பழமைவாத சக்திகள், மக்களை ஒருவரோடு ஒருவர் மோத விட முயற்சிக்கின்றன. இதனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று 1998 இல் கோவையில் நடந்த மத நல்லிணக்கப் பேரணியில் முழங்கினார்.

90 காவல் நிலைய கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும் என்றும், காவல்துறையினருக்கு பயிற்சியும், மறு பயிற்சியும் அளிக்க வேண்டும் என்று கடலூரில் பேசினார்.

sankarayya 102 year old life

 

91 சுத்த வாரத்திலிருந்து சுதந்திரத்தை நோக்கி என்று வத்திராயிருப்பில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாடு 1946ஆம் ஆண்டு அறைகூவல் விடுத்தது.

92 விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளராக 1967ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சங்கரய்யா, பின்பு நீண்டகாலம் மாநில தலைவராகவும் பின்பு மத்திய கிசான் குழு உறுப்பினராகவும், 1986 இல் அகில இந்திய பொதுச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் செயல்பட்டார்.

93 அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில கிளைகள் தங்களுடைய மாநிலங்களில் உள்ள விவசாய நிலைமைகளை திட்டவட்டமாக ஆய்வு செய்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கொள்கை வடிவத்துக்குள் நின்று அதற்கேற்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

94 விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் வர்க்கச் செயல்பாட்டு ஒற்றுமையின் தேவையை வலியுறுத்தினார். ஆதிவாசிகள் மற்றும் பெண் விவசாயிகளை திரட்டுவதை முக்கியமாக எடுத்துக் கூறினார்.

95 1984 இல் சங்கரய்யா தலைமையில் சோவியத் நாட்டிற்கும், மக்கள் சீனாவிற்கும் சென்ற தூதுக்குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும், சிரியாவுக்கு விவசாயிகள் சங்கம் சார்பாகவும் தூதுக்குழு சென்று வந்தது.

96 தியாகம், தூய்மை, போராட்டம் என்பவற்றை மூலதனமாக வைத்து நடத்தப்படுகிற அரசியலை கவர்ச்சியை மூலதனமாக வைத்து நடத்தப்படும் அரசியல் அடித்துக்கொண்டு போய்விடும் போல் தெரிகிறதே? எனும் கேள்விக்கு இதே கவர்ச்சியும் போலித்தனங்களும் இருந்த கேரளாவில் எப்படி நாம் ஜெயித்தோம்? மேற்கு வங்காளத்தில, திரிபுராவில் எப்படி நாம் வெற்றி பெற்றோம்? அடிப்படை வர்க்கங்களை எப்படி அவர்களை நாம் திரட்டினோம். அதுபோல தமிழகத்திலும், தொழிலாளிகளையும், விவசாயிகளையும் அமைப்பு ரீதியாக சிந்தாந்த ரீதியாகத் திரட்டினால் அது மாபெரும் புயல் காற்றாகும். அதற்கு முன் இந்த கவர்ச்சியெல்லாம் நிற்காது என்றார்.

97 2002ஆம் ஆண்டு கோவையில் நடந்த மாநில மாநாட்டில் ‘‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே தோழா தோழா’’ என்ற பாடலை இசைத்த போது கண்கள் கண்ணீரால் நனைந்தது. அது கண்ணீர் அல்ல. மகத்தான மனிதரின் லட்சியத்தின் வெளிப்பாடு.

98 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவதற்கு 1974 ஆம் ஆண்டு நவம்பர் 23 24 தேதிகளில் மதுரை திடீர் நகரில் உள்ள மின் ஊழியர் மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்க அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தார்.

99 2000 ஆம் ஆண்டு குமரியில் நடந்த அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து பொண்டு பேசும்போது, வள்ளுவர் கூறியது போல கல்லாமை, இல்லாமை, அறியாமை, அறவே ஒழித்திட, ஏற்றத்தாழ்வு போக்கிட வேண்டும். தமிழகத்தில் இப்போது என்ன பார்க்கிறோம். அதை மாற்ற வேண்டாமா? என வினவினார்.

100 .மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை தழுவி கவிதை நடையில் எழுதப்பட்ட கலைஞரின் தாய் நாவலுக்கு மகிழ்ச்சியுடன் முன்னுரை எழுதித் தந்தார்.

sankarayya 102 year old life

101.மேலவளவு படுகொலை செய்யப்பட்ட போது முதலில் நேரில் சென்ற தலைவர்.

102. தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக 2021ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட `தகைசால் தமிழர்’ என்ற விருது முதல் ஆளுமையாக பெற்றார் சங்கரய்யா.

தொகுப்பு :எஸ்.பாலா – மாநிலக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) sankarayya 102 year old life

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

’தகைசால் தமிழர்’ சங்கரய்யா காலமானார்!

தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

 

 

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *