thagaisal tamilar awardee k.veeramani

தகைசால் தமிழர் கி.வீரமணி: குவியும் வாழ்த்துகள்!

அரசியல்

தமிழ்நாடு மற்றும்‌ தமிழர்களின்‌ நலன்‌ வளர்ச்சிக்காக பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும்‌ வகையில்‌ தமிழக அரசு சார்பில்‌ ‘தகைசால்‌ தமிழர்‌’ விருது கடந்த 2021 ம்‌ ஆண்டு முதல்‌ வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும்‌ சுதந்திர தின விழாவில்‌ கொடுக்கப்படும் இந்த விருதுடன், பாராட்டுச்‌ சான்றிதழும்‌, பரிசுத்தொகையாக ரூ.10 லட்சம் காசோலையும்‌ வழங்கப்படும்‌.

தகைசால்‌ தமிழர் விருதானது 2021ம்‌ ஆண்டு மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மூத்த தலைவரான என்‌ சங்கரய்யாவுக்கும், 2022 ஆம்‌ ஆண்டு மூத்த கம்யூனிஸ்ட்‌ தலைவர்‌ நல்லகண்ணுவுக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி!

“தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றுள்ள மானமிகு ஆசிரியர் கி.வீரமணியை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். பத்து வயதில் பகுத்தறிவு மேடையேறி எண்பது ஆண்டுகளாக இன எழுச்சிப் போர்முரசம் கொட்டி வரும் சுயமரியாதைச் சுடரொளி அவர்.

இனம் – மொழி – நாடு மூன்றும் மூச்சென எந்நாளும் ஓய்வறியாமல் உழைத்துவரும் அவருக்கு கலைஞர் நூற்றாண்டில் இந்த விருது வழங்குவதைத் தமிழ்நாடு அரசு பெருமையாய்க் கருதுகிறது. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு அடையாளமாய் விளங்கும் மானமிகு ஆசிரியரின் தொண்டுத் தொய்வின்றி தொடரட்டும்!” என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

அமைச்சர்கள் நேரில் வாழ்த்து!

நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தகைசால் தமிழர் விருது பெற உள்ள கி. வீரமணியை சந்தித்து  பொன்னாடை அணிவித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

செல்வ பெருந்தகை வாழ்த்து அறிக்கை!

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பாக 2023ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருதிற்கு தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுவயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு, நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவர்.

1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist – (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து தந்தை பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருகிறார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமூகத்திற்கும் மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வரும் பொருத்தமான ஒருவரையே தகைசால் விருதுக்கு தேர்வு செய்துள்ள தேர்வுக்குழுவினருக்கும், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று  செல்வ பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து!

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது வாழ்த்து அறிக்கையில், ”தமிழ்நாடு அரசின் உயரிய விருதான தகைசால் தமிழர் விருது, இந்த ஆண்டு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

கோவை ராமகிருஷ்ணன் வாழ்த்து!

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தனது வாழ்த்து செய்தியாக, தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெறும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யாவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக எம்.பி.க்கள் வாழ்த்து!

தென் சென்னை எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் டிவிட்டர் பக்கத்தில், ”2023-ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர் விருதிற்கு’ அறிவிக்கப்பட்டுள்ள மானமிகு கீ.வீரமணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்து வயதில் தொடங்கி, 90 வயதிலும் சுறுசுறுப்பான சுயமரியாதை இளைஞராய் இன்றும் இன, மொழி எழுச்சி யோடு வலம் வரும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியருக்கு  இவ்விருதினை அறிவித்த கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!” என்று தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி எம்,பி ஞானதிரவியம் தனது வாழ்த்து செய்தியில், ”2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றுள்ள மானமிகு ஆசிரியர் கீ.வீரமணியை வாழ்த்தி வணங்குகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமார் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் அய்யா ஆசிரியர் கி.வீரமணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தேர்வு செய்த முதல்வருக்கும் நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்!

தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது  பெற்றுள்ள மானமிகு ஆசிரியர் கி.வீரமணிக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொலைபேசியில் வைரமுத்து வாழ்த்து!

மேலும்,  ’தகைசால் தமிழர்’ விருது பெற்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு முரசொலி செல்வம். கவிப்பேரரசு வைரமுத்து, முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் வைகுந்த் ஐ.பி.எஸ் உள்ளிட்டோர் தொலைப்பேசி வாயிலாகத் தங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆகஸ்ட் 11-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!

செந்தில் பாலாஜி வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “தகைசால் தமிழர் கி.வீரமணி: குவியும் வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *