சினிமாவிற்கு வருகிற கூட்டத்தை பார்த்து நடிகர் விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார் என்று சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசன் இன்று (செப்டம்பர் 11) தெரிவித்துள்ளார்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு என்ட்ரி கொடுத்துள்ள விஜய், மாநாட்டு பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் ஒரே சேர எழுந்திருக்கிறது.
குறிப்பாக, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விஜய்யை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்தில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் விஜய்யை மூன்று முறை விமர்சித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி சென்னை அய்யப்பன்தாங்கலில் திமுகவின் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்ச்சி சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்பரசன்,
“தங்களுக்கு கூட்டம் கூடினால் நாமும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அறிவு இருக்காது.
நடிகர்கள் அரசியலுக்கு வந்து சாதித்தது எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு போய்விட்டது. எம்ஜிஆரோடு ஜெயலலிதா இருந்ததால் அரசியலில் சாதித்தார். அதற்கு பிறகு நடிகர்கள் யாரும் அரசியலில் சாதிக்க முடியவில்லை. இனிமேல் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களது கனவு எடுபடாது” என்று விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருந்தார்
செப்டம்பர் 3-ஆம் தேதி சென்னை மாங்காட்டில், மாங்காடு வடக்கு நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்னதாக, புது புது ஆட்கள் எல்லாம் வருவார்கள். சத்தமாக பேசுவார்கள். குரல் கொடுப்பார்கள், கூட்டம் எல்லாம் நடத்துவார்கள். ஆனால், தேர்தலுக்கு பிறகு ஆளே இருக்கமாட்டார்கள்.
ஆனால் நமது கட்சியில் அப்படி கிடையாது… வாழ்வோ சாவோ… வெற்றியோ… தோல்வியோ மக்களோடு இருக்கிற கட்சி திமுகதான்.
மற்றவர்கள் எல்லாம் புதிதாக ஒரு கட்சி பேரை கொடுத்துவிட்டு போட்டோ எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆனால் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுககாரர்களுக்கு மட்டும் தான் உண்டு” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு படத்துக்கு ரூ.200, 250 கோடி சம்பளம் வாங்குகிறவர்கள், படம் ரிலீஸ் ஆகும் போது தனது ரசிகர்களுக்கு இலவசமாகத்தானே டிக்கெட் கொடுக்க வேண்டும். ஆனால் ஒரு டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு விற்கிறார்கள். இவர்கள் நாட்டை பாதுகாக்க முடியுமா?
ஏதோ கடந்த வருடம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறார்கள். குன்றத்தூரில் 15 ஆண்டுகளாக நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். சிலர் கட்சி ஆரம்பித்ததால் இப்போது பரிசு கொடுக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
கோட் திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக தா.மோ.அன்பரசனின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்களுக்கும், தமிழக வெற்றி கழக கட்சியினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில், புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆறு மாதம் கூட தாக்குப்பிடிக்காது என்று தா.மோ.அன்பரசன் பேசியுள்ளார்.
சென்னை மாடம்பாக்கத்தில் இன்று பேசிய தா.மோ.அன்பரசன், “சினிமாவிற்கு வருகிற கூட்டத்தை பார்த்து அனைவரும் தனது பின்னால் தான் இருக்கிறார்கள் என்று சிலர் கட்சி தொடங்குகிறார்கள்.
ஆறு மாதத்திற்கு தான் இந்த படம் ஓடும். அதன்பிறகு தாக்குப்பிடிக்காது. அவர் நடித்த படமே இரண்டு நாட்கள் கூட ஓடவில்லை. தொடர்ந்து இயங்கும் ஒரே கட்சி நமது கட்சி மட்டும் தான்” என்று விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!
மகா விஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்!