காஷ்மீரில் இன்று (ஆகஸ்ட் 11) அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பர்கல் சென்ட்ரியில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. இன்று அதிகாலையில் ராணுவ முகாமின் வேலியை பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கடக்க முயன்றனர்.
இதனையடுத்து தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சண்டை ஏற்பட்டது. அப்போது, தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் கூறுகையில், ”தீவிரவாதிகள் இருவர் பர்கலில் உள்ள ராணுவ முகாமின் வேலியை கடக்க முயன்ற நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது” என்று தெரிவித்துள்ளார்.
ஓமர் அப்துல்லா கண்டனம்!
இந்திய ராணுவத்தினர் மீதான கொடூர தாக்குதலுக்கு ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ”ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தது குறித்து அறிந்து வருந்துகிறேன்.
தாக்குதலைக் கண்டிக்கும் அதே வேளையில், ரஜோரி தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து பர்கல் சென்ட்ரியில் இந்திய ராணுவ முகாமுக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். 75வது சுதந்திர தினம் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியா?
அதேவேளையில், நேற்று புத்தகாமில் மூன்று லஷ்கர் இடி பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: மோடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!