தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எண்ணப்பட்டு வந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில் தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி 10 நாட்களில் முடிவை அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி தென்காசி தொகுதி தபால் ஓட்டு மறு வாக்கு எண்ணிக்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரத்தில் படிவம் 13 பி ஐ காட்டும்படி அதிமுக வேட்பாளர் கூறியதால் வாக்கு எண்ணும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கிய நிலையில் வாக்குப்பதிவு சீட்டில் கெஜட் அதிகாரிகளின் கையெழுத்து இல்லாத படிவங்களை நிராகரிக்க கோரி அதிமுக வைத்த கோரிக்கையால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பின்னர் மதியம் 3 மணியளவில் மறு வாக்கு எண்ணிக்கை மீண்டும் துவங்கியது. Form 13 A பிரிவில் உள்ள அனைத்து தபால் வாக்குகளும் சரிபார்க்கப்பட்டு எண்ணி முடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, Form 13 B , Form 13 C போலட் வாக்கு சீட்டுகள் எண்ணப்பட்டது.
தபால் ஓட்டு வாக்கு எண்ணிக்கை முடிவில் பழனி நாடார் 1,606 வாக்குகளும், அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியன் 673 வாக்குகளும் பெற்றனர். பழனி நாடார் 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் சென்ற பிரதமர் : ரஃபேல் வாங்க ஒப்புதல்!
எடப்பாடி மீதான டெண்டர் வழக்கு: உத்தரவு ஒத்திவைப்பு!