15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட தென்காசி தனித் தொகுதி தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்திருப்பதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகளை வரலாற்றில் கண்ட தொகுதியாக இருக்கிறது. அதிமுக கூட்டணி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணி சார்பில் ஜான்பாண்டியனும் என தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் களமிறங்குவதால் இத்தொகுதி இந்த முறை பரபரப்புக்கு பஞ்சமில்லாத தொகுதியாக மாறியிருக்கிறது. திமுக வேட்பாளராக சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராணி ஸ்ரீ குமார் முதல்முறை வேட்பாளராகக் களமிறங்குகிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக இசை மதிவாணன் களமிறங்குகிறார்.
இத்தொகுதி நாடார், மறவர், தேவேந்திர குல வேளாளர் மற்றும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதேபோல் இஸ்லாமியர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
எதற்கு பெயர் பெற்றது தென்காசி தொகுதி?
தென்காசி தொகுதியைச் சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை பசுமையோடு படர்ந்திருப்பதால் ஆண்டுதோறும் நல்ல மழைப்பொழிவை தொகுதியின் பல பகுதிகளில் பார்க்க முடியும். இதன் காரணமாக நெல், வாழை போன்ற விவசாயம் தொகுதி மக்களின் முக்கியமான தொழிலாக இருக்கிறது. மலைகளும், அருவிகளும் தென்காசியின் சொர்க்கமாக சூழந்திருப்பதால் பல முக்கிய சுற்றுலாத் தலங்களைக் கொண்ட தொகுதியாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் இத்தொகுதியில் தான் உள்ளது. காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோவில்களும் இத்தொகுதியில் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கும் தமிழ்நாடு முழுக்க தனி வரவேற்பு உண்டு. நாடு முழுக்க பிரசித்தி பெற்ற குற்றால அருவி இத்தொகுதியில் தான் வருகிறது.
செங்கோட்டை எல்லை மீட்பு போராட்டம்
குற்றாலத்திற்குச் சுற்றுலா செல்பவர்கள் ஏராளமானோர் செங்கோட்டையில் பார்டர் பரோட்டா சாப்பிடச் செல்வர். தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியாக செங்கோட்டை இருப்பதால் தான் அங்கு பரோட்டாவின் அடையாளம் பார்டர் பரோட்டாவாக மாறிப்போனது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, செங்கோட்டையை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு மிகப்பெரிய எல்லைப் போராட்டம் நடந்தது. செங்கோட்டையை மீட்க ஆயிரக்கணக்கில் தமிழர்கள் களத்தில் இறங்கிப் போராடினர். தமிழ்நாட்டின் எல்லைப் போராட்டத்தில் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் செங்கோட்டையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் முக்கியமானது. ஆனாலும் செங்கோட்டையின் சமவெளிப் பகுதி தமிழ்நாட்டிற்கும், மலையும் காடுகளும் நிறைந்த பகுதி கேரளாவிற்கும் சென்றது.
இந்தியாவையே உலுக்கிய மீனாட்சிபுரம்
அதேபோல் 1981 இல் இந்தியாவையே உலுக்கிய ஒரு சம்பவம் தென்காசி தொகுதியில் நடந்தது. மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக இஸ்லாமியர்களாக மதம் மாறினர். அத்வானி, வாஜ்பாய் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்கள் மீனாட்சிபுரத்திற்கு வந்து இறங்கி அவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பும்படி கேட்டு முகாமிட்டனர். இப்படி தென்காசியின் ஒரு சிறிய கிராமம் ஒட்டுமொத்த இந்தியாவின் விவாதப் பொருளாக மாறியது.
தென்காசியின் தொழில்களும் பிரச்சினைகளும்
விவசாயத்திற்கு அடுத்து இத்தொகுதியின் முக்கிய தொழிலாக சங்கரன்கோவில் பகுதியின் நெசவுத் தறித் தொழில் இருக்கிறது. இதேபோல் ராஜபாளையம் பகுதியில் பஞ்சாலைகள் உள்ளிட்ட பல சிறுகுறு தொழில்கள் உள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்னர் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கின்றன.
இவற்றைத் தாண்டி பெரிய அளவில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான தொழிற்சாலைகள் இல்லாததால் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் மற்றும் கடையநல்லூரைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமானோர் கேரளாவிற்கு கூலி வேலைக்குச் செல்கின்றனர். எனவே வேலைவாய்ப்பு என்பது தொகுதியின் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.
200 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுதி மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக இருந்துவந்த செண்பகவல்லி அணையில் 50 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உடைப்பு இன்னும் சரிசெய்யப்படாமல் இருக்கிறது. செண்பகவல்லி அணை பிரச்சினை என்பது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையிலான சிக்கலாக இருப்பதால் ஒவ்வொரு தேர்தலின்போதும் எப்படியாவது இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்குமா என காத்துக் கிடக்கிறார்கள் தென்காசி மக்கள். தென்காசிக்கு போதுமான ரயில்கள் இல்லை என்பதையும் குற்றச்சாட்டாக சொல்கிறார்கள் தொகுதி மக்கள்.
தென்காசியின் சட்டமன்றத் தொகுதிகள்
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய 4 தொகுதிகள் தென்காசி மாவட்டத்திலும், ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 2 தொகுதிகள் விருதுநகர் மாவட்டத்திலும் உள்ளன.
எந்தெந்த சமூகத்தினர்?
தொகுதி முழுக்க நாடார், தேவேந்திர குல வேளாளர் மற்றும் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பரவலாக இருக்கிறார்கள். சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதிகளில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி பகுதிகளில் இஸ்லாமியர்கள் நிறைய இருக்கிறார்கள்.
வரலாற்றில் தென்காசி தொகுதி
தென்காசி தொகுதி 1957 இல் துவங்கி தொடர்ந்து 41 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அருணாச்சலம் தொடர்ச்சியாக 6 முறை தென்காசியின் எம்.பியாக இருந்தார். 1998 இல் தான் இத்தொகுதி அதிமுகவின் கைகளுக்கு மாறியது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இத்தொகுதியில் கணிசமான பலத்தினைக் கொண்டிருந்தனர். காங்கிரஸ் கட்சி 9 முறையும், அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும், திமுக 1 முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்றிருக்கின்றன. சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த தொகுதி என்பதால் சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதிகளில் மதிமுகவிற்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருக்கிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் & 2021 சட்டமன்றத் தேர்தல் – ஒப்பீடு
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தனுஷ் குமார் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமியை விட 1,20,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தனுஷ் குமார் பெற்ற வாக்குகளை 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த 6 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடும்போது தொகுதியில் இரண்டு ஆண்டுகளில் நடந்த சில மாற்றங்களை கவனிக்க முடியும்.
முதலில் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி:
2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் திமுக வேட்பாளர் தனுஷ் குமார், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட 10,193 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் அதிமுக வேட்பாளரை விட 3,898 வாக்குகளே அதிகம் பெற்றார்.
இரண்டு ஆண்டுகளில் திமுக பெற்ற வாக்கு எண்ணிக்கை பாதிக்கும் மேலாக குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
இரண்டாவது ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதி:
2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் திமுக வேட்பாளர் தனுஷ் குமார் ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட 20,214 வாக்குகள் அதிகம் பெற்றார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் அதிமுக வேட்பாளரை விட 12,738 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார்.
2 ஆண்டுகளில் திமுக கூட்டணியின் வாக்குகள் இத்தொகுதியில் 33,000 குறைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
மூன்றாவது சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி:
2019 இல் அதிமுக வேட்பாளரை விட 18,205 வாக்குகள் அதிகம் பெற்றிருந்த திமுக, 2021 தேர்தலில் 5,297 வாக்குகளே அதிகம் பெற்றது.
இதன்மூலம் வாக்கு வித்தியாசம் மூன்று மடங்கு குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
நான்காவது வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்றத் தொகுதி:
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட 23,797 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக, 2021 இல் 2,367 வாக்குகளே அதிகம் பெற்றது. இங்கும் வாக்கு வித்தியாசம் பெருமளவு குறைந்திருக்கிறது. இத்தொகுதி திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளர் சதன் திருமலை குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி:
2019 இல் அதிமுக வேட்பாளரை விட 22,978 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தது திமுக. இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் 2021 இல் இத்தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு வழங்கப்பட்டது. ஐ.யூ.எம்.எல் வேட்பாளர் முகமது அபூபக்கர் அதிமுக வேட்பாளரை விட 24,349 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். இத்தொகுதியிலும் திமுக கூட்டணியின் வாக்கு எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்திருக்கிறது.
ஆறாவது தென்காசி சட்டமன்றத் தொகுதி:
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட 20,860 வாக்குகள் அதிகம் பெற்றது திமுக.
2021 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் அதிமுக வேட்பாளரை விட 370 வாக்குகளே அதிகம் பெற்றார்.
இங்கு திமுக கூட்டணியின் வாக்கு எண்ணிக்கை 20,000க்கும் அதிகமாக குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
சரிந்ததா திமுகவின் வாக்குகள்?
தென்காசியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுக கூட்டணியும், 3 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெற்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியை விட 1,20,000 வாக்குகள் அதிகம் பெற்றிருந்த திமுக கூட்டணி, 2021 சட்டமன்றத் தேர்தலில் தென்காசியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குகளை சேர்த்துப் பார்க்கும்போது, அதிமுக கூட்டணியை விட 25,000 வாக்குகள் பின்தங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
ராணி ஸ்ரீகுமார் வேட்பாளரான பின்னணி
தொடர்ச்சியாக திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கி வந்த தென்காசி தொகுதியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தான் முதல் முறையாக களமிறங்கியது. இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட சிட்டிங் எம்.பி தனுஷ் குமார் முயற்சித்தார். மேலும் முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரையும் தீவிரமாக முயற்சித்தார். ஆனால் திமுகவின் சார்பாக புதுமுகமான ராணிஸ்ரீகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் வேட்பாளராக அறிவிப்பதற்கும் ராணி ஸ்ரீகுமாரின் பெயர் பரிந்துரையில் இருந்து இறுதியில் மாற்றப்பட்டது என்கிறார்கள் திமுக நிர்வாகிகள். அவரது பெரியப்பா ஏற்கனவே இரண்டு முறை சங்கரன்கோவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
திமுகவின் வேட்பாளர் பட்டியலில் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் என்று இரண்டு பெண் வேட்பாளர்களே இடம்பெற்றிருந்ததால், பெண்களுக்கான கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என்று மூன்றாவதாக ராணி ஸ்ரீகுமார் இத்தொகுதியில் திமுக தலைமையால் கடைசி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பாஜகவிடமிருந்து வெளியே வந்துவிட்டேன்..நம்பிக்கையுடன் களமிறங்கும் கிருஷ்ணசாமி
அதிமுக கூட்டணியில் இத்தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் இங்கு போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமியைப் பொறுத்தவரை இத்தொகுதியில் இதற்கு முன்பே 6 முறை தொடர்ந்து போட்டியிட்டிருக்கிறார். இதனால் தொகுதி முழுதும் அறிந்த முகம் என்பது அவரது பலம். புதிய தமிழகம் கட்சியை ஆரம்பித்து அவர் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 1998-இல் இத்தொகுதியில் தனியாகவே 1,23,000 வாக்குகளைப் பெற்றார். அடுத்த தேர்தலில் 1,86,000 வாக்குகளைப் பெற்றார். அதன்பிறகு பல்வேறு கூட்டணிகளில் தொடர்ச்சியாக கிருஷ்ணசாமி தென்காசியில் போட்டியிட்டிருக்கிறார். ஒரு முறை கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் தொகுதியில் அவருக்கான குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் என்பதை வைத்திருக்கிறார். 2014 தேர்தலில் திமுக கூட்டணியிலும், 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியிலும் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரத்தில் தனியாக போட்டியிட்டு 6544 வாக்குகளையே அவரால் பெற முடிந்தது. இத்தனைக்கும் 1996 சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு இத்தொகுதியில் வெற்றி பெற்றவர் இவர்.
அதன்பின்பும் பாஜகவுடன் இணக்கமாகவே இருந்து வந்தார். சமீபத்தில் அதிமுக-பாஜக கூட்டணி பிரிந்ததற்குப் பிறகு பாஜகவிடமிருந்து விலகி அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
”2019 நாடாளுமன்றத் தேர்தலில் நான் தோற்றதே பாஜகவுடன் இருந்ததால்தான். நான் கஷ்டப்பட்டு அடிபட்டு மிதிபட்டு உருவாக்கிய வாக்கு வங்கி பாஜகவுடன் இருந்ததால் பறிபோய்விட்டது, அதை நான் கண்ணீர் விட்டுத் தான் சொல்ல வேண்டும். இப்போது நான் வெளியே வந்துவிட்டேன். இப்போதுதான் நான் சுதந்திரமாக இருக்கிறேன். இந்த முறை மக்கள் எல்லோரும் என்னை ஆதரிப்பேன் என்று சொல்கிறார்கள்” என நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.
களத்தில் ஜான் பாண்டியன்..பரப்பான தென்காசி
பாஜகவிற்கு தென்காசி தொகுதியில் கடையநல்லூர் உள்ளிட்ட சில பகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. அதனால் இத்தொகுதியில் பாஜகவே நேரடியாக நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவுக்கு நெருக்கமானவரான ஆனந்தன் என்பவர் தென்காசி தொகுதியை எதிர்பார்த்து 2 ஆண்டு காலமாக பல வேலைகளை தொகுதியில் பார்த்து வந்தார். தென்காசிக்கு 3 முறை ஆளுநரை அழைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார். டெல்லி மேலிடத்தில் பேசி எல்லாம் ஓகே ஆன நேரத்தில், திடீரென கடைசி நேரத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தென்காசியின் வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டதால் ஆனந்தன் ஆஃப் ஆகி விட்டார். ஆனந்தனுக்கு சட்டப்பேரவை தேர்தலில் சீட்டு ஒதுக்குகிறோம் என்று சொல்லி சமாதானப்படுத்தியுள்ளது பாஜக தலைமை.
கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் எல்லோரும் தேர்தலில் போட்டியிட வேண்டும், அப்போதுதான் நாம் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்ட முடியும் என்று பாஜக முடிவு செய்ததால் ஜான் பாண்டியனின் கைகளுக்கு தென்காசி போய் சேர்ந்தது,
ஜான்பாண்டியனின் அரசியல் என்பது பாமகவில் தான் தொடங்கியது. மருத்துவர் ராமதாஸ் பாமகவை தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே 1989 இல் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஜான் பாண்டியன் களமிறக்கப்பட்டார். அப்போது அங்கு 83,000 வாக்குகளைப் பெற்றார் ஜான் பாண்டியன். தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பாமகவின் முக்கியப் புள்ளியாக பயணித்த அவர், 2000 ஆம் ஆண்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ந்து அதிமுக கூட்டணியிலும், பாஜக கூட்டணியிலும் இருந்து வருகிறார். எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பிரதிநிதிகளில் முக்கியமானவராக ஜான் பாண்டியனின் இடம் மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
புதிய தமிழகம் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இரண்டுமே தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து இயங்கும் கட்சிகள் என்பதாலும், டாக்டர் கிருஷ்ணசாமியும், ஜான் பாண்டியனும் முதல் முறையாக ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகிறார்கள் என்பதாலும் தென்காசி தொகுதி தமிழ்நாட்டின் பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.
உயரும் நாம் தமிழர் வாக்குகள்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக இசை மதிவாணன் களமிறங்கியிருக்கிறார். 2019 பாராளுமன்றத் தேர்தலில் 59,445 வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, 2021 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து 92,000 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்து வருவதைக் காட்டுகிறது. எனவே இசை மதிவாணன் பிரிக்கும் வாக்குகள் என்பதும் வெற்றி தோல்வியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றே சொல்லலாம்.
ரேஸில் யாருக்கு வாய்ப்பு?
தென்காசி தொகுதி தனித்தொகுதி என்பதால் இங்கு களமிறக்கப்பட்டுள்ள திமுக, அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அனைவருமே தேவேந்திர குல வேளாளர்கள் தான். வேட்பாளர்கள் எல்லோரும் தேவேந்திர குல வேளாளர்களாக இருந்தாலும், தொகுதியில் உள்ள மற்ற சமூகத்தினர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிக்கட்சியைச் சேர்ந்தவர்களை ஆதரிப்பதில் தயக்கம் காட்டி வருகிறார்கள். பொதுவான கட்சியாக இருந்தால் பிரச்சினை இருக்காது என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது. டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ச்சியாக பலமுறை இங்கு தோற்பதற்கும் இதுவே காரணமாக அமைந்தது.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை இரட்டை இலை சின்னமும் கிருஷ்ணசாமியின் தென்காசி வாக்கு வங்கியும் அவரது பலமாக இருக்கிறது. திமுக தனது கூட்டணியின் பலத்துடன் களமிறங்கியுள்ளது. ஜான் பாண்டியன் மோடியை முன்னுறுத்தி வாக்கு கேட்கிறார். தென்காசியைப் பொறுத்தவரை பிரதான போட்டி என்பது ராணி ஸ்ரீகுமாருக்கும், டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் தான் இருக்கிறது என்பதை கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சூரியனோடு மோதும் தாமரை… பிந்தும் இரட்டை இலை…வேலூர் தொகுதி நிலவரம்!
“ஆளுநர்கள் அரசியலமைப்புபடிதான் செயல்பட வேண்டும்”: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா