எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு சட்டவிரோதமாக வழங்கி முறைகேடுகளில் ஈடுபட்டதாக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ல் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. கடந்த 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் விசாரணைக்கு வரவில்லை.
இந்நிலையில் விரைவில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்எஸ் பாரதி தரப்பில் 3 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி நீண்ட காலம் அவகாசம் தரமுடியாது ஆகஸ்ட் 2ஆம் தேதி கட்டாயம் விசாரணை நடைபெறும் என்று கூறினார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரியா