“மன உளைச்சலா இருக்கு”: எடப்பாடி வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவு!

அரசியல்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேச அறப்போர் இயக்கத்துக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனித்த நெடுஞ்சாலைத்துறையில் ரூ.692 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.

இதுதொடர்பான செய்தியைத் தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது அறப்போர் இயக்கம் வெளியிட்டு வந்தது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் அறப்போர் இயக்கத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே மான நஷ்டஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

தன்னை பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (டிசம்பர் 2) விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், “ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆதரவாக டெண்டர் விடப்பட்டதாகக் கூறுவது தவறு. எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

அறப்போர் இயக்கத்தின் சார்பில், எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் வைத்து புகார் கொடுக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரை வைத்துத்தான் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிடப்பட்டது என்று வாதிடப்பட்டது.

மேலும், 2018-19 ஆம் ஆண்டில் போடப்பட்ட சாலையை மீண்டும் போட டெண்டர் ஒதுக்கப்பட்டது. அதுவும் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு இந்த டெண்டர் விடப்பட்டது.

டெண்டர் குறித்த முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்ததால், அதற்கு துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பு. இந்த முறைகேடு குறித்த தகவல் ஆர்டிஐ மூலம் பெறப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு கருத்துகளையோ, ஆதாரம் இல்லாத கருத்துகளையோ வெளியிடக் கூடாது என்று அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவிட்டார்.

பிரியா

ஷாக் அடிக்கும் தங்கம் விலை: ரூ.40 ஆயிரத்தைத் தாண்டியது!

ராகுல் நடைபயணம்: இணையும் பிரபலங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *