இடைத் தேர்தல் செலவுக்கு சீமான் போடும் திட்டம்!

அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும், வேட்பாளர் யார் என்பது ஜனவரி 29 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே இடைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க நாம் தமிழர் கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வை நேற்று (ஜனவரி 22) முதல் தொடங்கியுள்ளார் சீமான்.

இதன்படி நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர் , திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை போரூரில் அமைந்திருக்கும் கட்சித் தலைமை அலுவலகத்தில் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் நிர்வாகிகள் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டுவிட்டதால் அருகே இருக்கும் ஐஸ்வர்யா மஹாலுக்கு கூட்டம் மாற்றப்பட்டது.

மேடையில் சீமான் உட்பட யாருக்கும் நாற்காலி போடப்படவில்லை. சீமான் மட்டும் நின்று கொண்டு பேச அவருக்கு எதிரே மைக்கும், போடியமும் வைக்கப்பட்டிருந்தன. மாநில நிர்வாகிகள் எல்லாம் சீமானுக்கு இருபுறமும் மேடையிலேயே கீழே அமர்ந்துகொண்டனர்.

காலை 11.30க்கு வந்தார் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கலந்தாய்வுக் கூட்டம் என்று சொல்லப்பட்டாலும் சீமான் மட்டுமே பேசினார்.

“ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் எதிர்பாராத விதமாக வந்திருக்கிறது. நாம் கடந்த தேர்தலில் 7 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பெற்றோம். இப்போது அதே அளவோ அதைவிட அதிகமாகவோ பெற வேண்டும் இல்லையென்றால் நிற்காமல் விட்டுவிடலாம் என்று சிலர் என்னிடம் யோசனை சொன்னார்கள். ஆனால், எந்தத் தேர்தலையும் நாம் தமிழர் தவிர்க்காது.

நாம் வளர்ந்துகொண்டே இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இந்த வளர்ச்சிக்கு காரணம் நீங்களோ நானோ கிடையாது. வட நாட்டுக்காரன் தான். அவன் ஆயிரக்கணக்கில் தினமும் இறங்கிக் கொண்டே இருக்கிறான். அவர்களால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆபத்து என்று சீமான் மட்டும்தான் எச்சரித்துக் கொண்டே இருக்கிறான். இந்த பயத்தை தமிழர்கள் இப்போது உணரத் தொடங்கிவிட்டனர்.

ஆளுங்கட்சி பணத்தை அள்ளி இறைப்பார்கள். நாம் களத்தில் நிற்க வேண்டும். எந்த களத்தையும் ஒதுக்கிவிடவோ, ஒதுங்கிவிடவோ முடியாது. நம்மிடம் தேர்தல் செலவுக்குக் கூட போதுமான பணம் இல்லை. அதற்காக ஒதுங்கிவிட முடியாது. ஒரு கோடீஸ்வரன் நமக்கு பத்தாயிரம் ரூபாய் தான் நன்கொடை கொடுத்தார். என்ன தம்பி இவ்வளவுதான் கொடுக்கிறார் என்று நம் நிர்வாகியிடம் கேட்டேன். ‘அண்ணே.. இதுக்கே அவர் மூணு நாள் சாப்பிடமாட்டார்’ என்று பதிலளித்தார் அந்த தம்பி.

அண்ணன் ஆட்சிக்கு வந்துவிடுவேன். அப்புறம் இப்படிப்பட்ட கோடீஸ்வரர்களை எல்லாம் ஒரு மைதானத்தில் பிடித்துப் போட்டு எல்லாவற்றையும் மக்களுக்குக் கொண்டு போய் சேர்ப்போம்” என்று தனது முத்திரைச் சிரிப்பை சிரித்த சீமான் தொடர்ந்தார்.

“இடைத் தேர்தலில் எல்லா பக்கமும் பண மழை பெய்யும் நிலையில், நாம் மட்டுமே நமக்கு துணை. எனவே தேர்தல் நடக்கும் தொகுதி நீங்கலாக மற்ற ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் இடைத் தேர்தல் செலவுக்காக தலைமையிடம் கொடுக்க வேண்டும். அதுவே 23 லட்ச ரூபாய்தான் வரும். மேற்கொண்டு செலவை கட்சியிலேர்ந்து பார்த்துக்குறோம். சாப்பாடு செலவு, மண்டபம் புடிக்கணும். ஒரு காலத்தில் நாம் செய்தித் தாள்களையும் காகிதங்களையும் இரவில் போட்டுக் கொஞ்ச நேரம் கண்ணுறங்கி தேர்தல் வேலை பார்த்திருக்கிறோம். இப்போது மண்டபம் பிடித்து தங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறோம்.

நாம்தான் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி. மூன்றோடு நின்றுவிடக் கூடாது. அதற்கு அடுத்த இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். அதிமுக பிளவுபட்டிருக்கும் நிலையில் அதை பாஜக கைப்பற்ற முயற்சிக்கிறான். அதை நாம் அனுமதிக்ககக் கூடாது.

கை, கால்கள் எல்லாம் வெளியே தெரியும், அவற்றுக்கு அழகழகாய் ஆடை அணிகலன்கள் சூட்டிப் பார்க்கிறோம். ஆனால் மூளையும், இதயமும் வெளியே தெரியாது. அதுபோலத்தான் இங்கே மேடையில் இருக்கும் நாங்கள் எல்லாம் கை, கால்கள். ஆனால் வெளியே தெரியாமல் இருக்கும் தொண்டர்களும், நிர்வாகிகளாகிய நீங்களும்தான் நம் இயக்கத்தின் மூளையும், இதயமும் போன்றவர்கள். மூளையும், இதயமும் இல்லையென்றால் இந்த கை, கால்கள் செயல்படாது.

எப்படியாவது வண்டிகளைப் பிடித்து ஈரோடுக்கு வந்து சேருங்கள். நாம் தமிழர் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று பேசினார் சீமான்.

சீமான் பேசி முடித்தவுடன் புதுச்சேரி மகளிர் பாசறையில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதியாக சீமானிடம் அளித்தார்கள். அவர்களுக்கு நன்றி சொன்ன சீமான், ‘மத்த மகளிர் பாசறைகளும் இதை கவனத்தில் கொள்ளுங்கள்’ என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

கூட்டத்தில் திருவள்ளூர் இளைஞர் பாசறை மாவட்ட நிர்வாகி மரணம் அடைந்ததை ஒட்டி அவரது குடும்பத்துக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்கினார் சீமான்.

நேற்றைய கூட்டத்தைத் தொடர்ந்து இன்றும் அடுத்தடுத்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் பேசுகிறார் சீமான். திமுக, அதிமுக அணிகளின் கரன்சிப் பாய்ச்சலை எதிர்த்துக் களமாட, நாம் தமிழர் தம்பிகளை கூர் தீட்டி ஈரோட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார் சீமான்.

ஆரா

பிக் பாஸ்: யார் இந்த அசீம்?

வெற்றிக்கு அடிப்படை சின்னம்தான்: ஜி.கே.வாசன் பேட்டி!

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *