மதுவிலக்கு தொடர்பாக மக்களவையில் திருமாவளவன் பேசிய நிலையில், அவருக்கு நிர்மலா சீதாராமன் காட்டமாக பதிலளித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் இன்று (ஜூலை 2) பேசினார்.
அப்போது போதைப்பொருள் விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், “அரசமைப்புச் சட்டத்தில் ஆர்டிகிள் 47, இந்திய அளவில் ஒன்றிய அரசு போதை பொருள்களையும், சாராயத்தையும் நீக்குவதற்கு முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறது.
1954ல் அமைக்கப்பட்ட மதுவிலக்கு விசாரணை குழு அறிக்கை ஒன்றை அளித்தது. அதில் 1958லேயே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.
ஆனால் ஒன்றிய அரசு இதுவரை அதை நடைமுறைப்படுத்தவில்லை.
அதேசமயம் 1944ல் யூனிஃபார்ம் சிவில் கோடு வேண்டும் என்கிற அந்த ஆர்டிகிள் எடுத்துகொள்ளப்பட்டு, அதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.
இன்றைய இளம் தலைமுறை பாதிக்கப்பட்டு வருகிறது. இதை பார்த்து எனக்கு வேதனையாக இருக்கிறது. இந்த வேதனை அரசுக்கு இருக்கிறதா என தெரியவில்லை.
போதை பொருளால் மனித வளம் பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் போதைப்பொருள் இல்லை. இந்தியா முழுவதும் போதைப்பொருள் தாராளமாக புழக்கத்தில் உள்ளது.
4 மாநிலங்களைத் தவிர நாடு முழுவதும் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இது நாட்டுக்கு செய்யும் துரோகம். எனவே இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
திருமாவின் பேச்சுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ தேசிய அளவில் போதை பொருள் ஒழிப்பை, மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்கிறார் மூத்த உறுப்பினர். அதை வரவேற்கிறேன்.
ஆனால் அவரது கட்சி கூட்டணி வைத்துள்ள திமுக ஆளும் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே எங்களிடம் சொல்வதற்கு பதில், இவர் முதலில் திமுக அரசிடம் சொல்ல வேண்டும். அவர் அங்கு பேச வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் பரவி கிடக்கிறது” என்று ஆவேசமாக கூறினார்.
நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு தமிழக எம்.பி.க்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
காங்கிரஸ் கட்சியின் ஆணவம் அடங்கவில்லை: மக்களவையில் மோடி காட்டம்!
36ஆவது ஆண்டில் பாமக… இந்த பரிசாவது கொடுங்கள் : கட்சியினருக்கு ராமதாஸ் மடல்!