கோழியுடன் மதுபாட்டில் வழங்கும் விழா: புது தேசியக் கட்சி ஸ்டைல்!

Published On:

| By Prakash

தெலுங்கானா முதல்வர் நாளை (அக்டோபர் 5) தேசியக் கட்சி தொடங்க இருப்பதையடுத்து, அம்மாநிலத்தில் கட்சி நிர்வாகிகள் மதுபாட்டில்களுடன், உயிருடன் கோழியையும் விநியோகித்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது. இவர், வரப்போகும் 2024 நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ.கவை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு உதாரணமாய், அண்மைக்காலமாகவே பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தேசிய அரசியலில் நுழைவதற்கு அவர் காட்டி வரும் ஆர்வமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதற்காக தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கடந்த ஜூன் மாதம் முதல் சந்திரசேகர ராவ் ஆலோசைனயில் ஈடுபட்டு வருகிறார்.

இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 12ம் தேதி அம்மாநில சட்டப்பேரவையில் பேசிய சந்திரசேகர ராவ், தேசிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். தேசிய அளவில் கால்பதிக்கும் நோக்கத்திலும், பாஜகவுக்கு எதிராக புதிய அணி உருவாக்கும் நோக்கத்திலும் சந்திரசேகர ராவ், பிற தலைவர்களை சந்திக்கத் தொடங்கினார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே எனப் பலரையும் சந்திரசேகர ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் நாளை (அக்டோபர் 5) புதிய கட்சியை தொடங்குவது பற்றி சந்திரசேகர ராவ் அறிவிக்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து அக்டோபர் 9ம் தேதி, டெல்லியில் உரையாற்ற இருக்கிறார். இதை தெலுங்கானாவில் அவரது கட்சியினர் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

அதற்காக தெலுங்கானாவில் இன்று (அக்டோபர் 4) வாரங்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தெலுங்கானா கட்சி நிர்வாகிகள், மது பாட்டில்களுடன், உயிருடன் கோழியையும் குடிமகன்களுக்கு விநியோகித்து வருகின்றனர். வாரங்கலில் உள்ளூர் மக்களுக்கு டிஆர்எஸ் தலைவர் ராஜனாலா ஸ்ரீஹரி மதுபாட்டில்கள் மற்றும் கோழிகளை வழங்கிவரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஜெ.பிரகாஷ்

டி20 உலகக் கோப்பை: மெளனத்தைக் கலைத்த பும்ரா!

நான் நித்யானந்தாவா? இடிக்கப்பட்ட ஆசிரமம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share