தெலுங்கானாவில் முதல்வர் சந்திர சேகர் ராவ் கட்சியின் முக்கிய நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை வைத்துவந்த நிலையில்,
2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் போட்டியிடும் வகையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தன் கட்சியின் பெயரை, பாரத் ராஷ்ட்ரிய சமிதி எனத் தேசியக் கட்சியாக மாற்றி அறிவித்தார்.
இந்த மாற்றத்திற்கு அவருடைய கட்சியில் சில எதிர்ப்புகளும் இருந்துவந்தன. அது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் முக்கிய நிர்வாகியும் போங்கிர் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பூர நர்சய்யா கௌட், இன்று (அக்டோபர் 15) அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தையும் கட்சி மேலிடத்திற்கு அனுப்பியுள்ளார்.
விலகல் குறித்து இன்று (அக்டோபர் 15) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியல்வாதியான என்னால் கட்சியில் கடமையைச் செய்ய முடியவில்லை.
எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் கே.சி.ஆர், பாரத் ராஷ்டிர சமிதியை தொடங்கினார்.
அதை, செய்திகள் மூலம்தான் தெரிந்துகொண்டோம். முதல்வரை சில நிமிடம்கூடச் சந்திக்க முடியவில்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தாம் தோல்வியடைந்ததற்குக் காரணம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் (பாரத் ராஷ்டிர சமிதி) ஏற்பட்ட உட்கட்சிப் பூசலே.
அதனால் தாம் பலமுறை அவமானப்படுத்தப்பட்டேன். எனது ராஜினாமா கடிதத்தில் முதல்வரை விமர்சிக்கவில்லை, உண்மைகளை மட்டுமே எழுதியுள்ளேன்”எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தெலுங்கானா மாநிலம் முனுகோட் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த அக்டோபர் 13ம் தேதி,
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (பாரத் ராஷ்டிர சமிதி) வேட்பாளர் குசுகுந்த்லா பிரபாகர் ரெட்டியின் வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பூர நர்சய்யா, அன்று மாலையே டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தார்.
இருப்பினும், பூர நர்சய்யா தனது அரசியல் எதிர்காலம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.
ஆனால் பாஜக தலைவர்களைச் சந்தித்து இருப்பதால், விரைவில் அக்கட்சியில் ஐக்கியமாகலாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா தனி மாநில கோரிக்கையில் முக்கிய பங்காற்றியவரான பூர நர்சய்யா, முனுகோட் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தமக்கு கேசிஆர் வாய்ப்பு அளிக்கவில்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், வேட்பாளரை தேர்வு செய்யும் விஷயத்திலும் அவரிடம் கேசிஆர் ஆலோசிக்கவில்லை என்பதும், தமது பகுதியில் நடைபெறும் கூட்டங்களுக்கு தம்மை அழைக்கவில்லை’ என்பதும் பூர நர்சாய்யவின் முக்கியக் குற்றச்சாட்டாக இருக்கிறது.
பூர நர்சய்யா கட்சியில் இருந்து விலகியதன் மூலம் தெலுங்கானா பின்னடைவை சந்தித்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
கணக்கில் வராத பணம்: பொறியாளர்கள் மீது வழக்குப்பதிவு!