“செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பரங்களில், பிரதமர் மோடி படம் எங்குமே வைக்கப்படவில்லை. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும்” என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை (ஜூலை 27) 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த நிலையில், அது சம்பந்தப்பட்ட விளம்பர போஸ்டர்களில் பிரதமர் மோடி படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் தியாக சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களை கொண்ட கல்வெட்டு பதிக்கப்பட்டு வருகிறது. இதில் விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரின் கல்வெட்டுகளை இன்று (ஜூலை 27) காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை பதித்தார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க பாரதப் பிரதமர் வருவது மகிழ்ச்சி என்றாலும் இதில் எனக்கு ஓர் ஆதங்கம் உள்ளது. நம் நாட்டின் அடையாளமாக இருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படம், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு விளம்பரங்களில் எங்குமே வைக்கப்படவில்லை. இதை தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் கவனிக்க வேண்டும். இனி எல்லா இடங்களிலும் மோடியின் படம் இடம் பெற வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்