telangana election winds of changes

தெலங்கானா தேர்தல்: மாற்றம் வருமா?

அரசியல் ஐந்து மாநில தேர்தல் சிறப்புக் கட்டுரை

5 மாநில சட்டமன்றத் தேர்தல் அலசல் மினி தொடர்- 17

மோகன ரூபன்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. எஞ்சியிருப்பது தெலங்கானா மட்டும் தான். நாளை அங்கு வாக்குப்பதிவு என்ற நிலையில், தெலங்கானாவில் தேர்தல் ஜூரம், கொதி கொதி என்று கொதித்து வருகிறது.

அனல் பறக்கும் பிரச்சாரம்!

தெலங்கானா மாநிலம் சந்திக்கும் மூன்றாவது சட்டமன்றத் தேர்தல் இது. இந்த முறை மூன்று பெரிய கட்சிகளுமே தங்களால் முடிந்த அளவுக்கு கட்சியின் பிரசார பீரங்கிகளைக் களமிறக்கி விட்டுள்ளன. பாரதிய ஜனதாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா, அனுராக் தாக்கூர், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா…

காங்கிரசில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக அமைச்சர் சிவகுமார். இப்படி பலர்.

ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதியில் முதல்வர் சந்திரசேகர் ராவ், தாரக ராமராவ், ஹரிஷ்ராவ், கல்வகுந்தளா கவிதா.. இத்யாதி..இத்யாதி.

தெலங்கானா தேர்தல் பரப்புரையில் தெறித்து விழுகிற வசனங்களைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

‘காங்கிரஸ் சுல்தான் என்றால், பி.ஆர்.எஸ். ஒரு நிஜாம். இவர்கள் இருவருக்குமே தெலங்கானாவில் இனி இடமில்லை. காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ். கட்சியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள், ஒரே துணியில் வெட்டப்பட்ட இரண்டு துண்டுகள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது பி.ஆர்.எஸ். கட்சியின் கார்பன் காப்பி (நகல்) போலத்தான் இருக்கும். காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ். கட்சியும் நோய்கள். பா.ஜ.க.தான் அதற்கு மருந்து’ இப்படி பரப்புரையில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

‘ஊழல் செய்த பி.ஆர்.எஸ். கட்சிக்காரர்கள் இந்தமுறை சிறைக்குப் போவார்கள். இது எனது வாக்குறுதி. டி.ஆர்.எஸ் கட்சி இப்போது பி.ஆர்.எஸ். என்று மாறியிருக்கிறது. யு.பி.ஏ. இப்போது இந்தியா கூட்டணியாக மாறியிருக்கிறது. பெயரை மாற்றலாம். ஊழல் வரலாறு, ஓட்டுவங்கி அரசியல் இதையெல்லாம் மாற்ற முடியுமா?’ என்றும் கூறியிருக்கிறார் மோடி.

அமித்ஷா அதற்கும் ஒருபடி மேல். ‘முதல்வர் கே.சி.ஆரின் காரை காரேஜில் விட வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றிருக்கிறார். (பி.ஆர்.எஸ் கட்சியின் தேர்தல் சின்னம் கார்).

காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா?

‘காங்கிரஸ் கட்சி தெலங்கானாவுக்கு என்ன செய்தது?’ என்று முதல்வர் கே.சி.ஆர். கேட்க, பிடிபிடியென பிடித்திருக்கிறார் ராகுல் காந்தி.

‘நீங்கள் படித்த பள்ளி, கல்லூரியைக் கட்டியது காங்கிரஸ் கட்சி. நீங்கள் போகிற சாலையைப் போட்டது காங்கிரஸ் கட்சி. ஐதராபாத்தை தொழில்நுட்ப நகரமாக மாற்றியது காங்கிரஸ் கட்சி. அது சரி. காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவுக்கு என்ன செய்தது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் பி.ஆர்.எஸ். கட்சி தெலங்கானாவுக்கு என்ன செய்தது?’ என்று கேட்டிருக்கிறார் ராகுல்.

பிரியங்கா காந்தி அவர் பங்குக்கு, ‘பி.ஆர்.எஸ்.கட்சி காலாவதி ஆகிவிட்டது. அதன் எக்ஸ்பயரி டேட் முடிந்து விட்டது. பி.ஆர்.எஸ்.கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பண்ணை வீட்டில்தான் ஆட்சி நடக்கும்’ என்றிருக்கிறார் பிரியங்கா.

பிரதமர் மோடி கூட, ‘தெலங்கானா முதல்வர் வண்டியின் ஸ்டீயரிங் வீலை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு, பண்ணை வீட்டுக்கு ஷிப்ட் ஆகிவிட்டார்’ என்று பேசியிருக்கிறார்.

அது என்ன பண்ணை வீடு?

தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர். போட்டியிடும் தொகுதிகளில் ஒன்று கஜ்வேல். அங்கே அவருக்கு ஒரு பண்ணை வீடு இருக்கிறது. ‘முதல்வர் கே.சி.ஆரை இப்போதெல்லாம் கட்சியின் தொண்டர்கள் கூட பார்க்க முடியவில்லை. அவர் எப்போதும் பண்ணை வீட்டில் இருக்கிறார்’ என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இதைத்தான் பிரதமரும், பிரியங்காவும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சிறந்த பேச்சாளர். தேர்தல்களை அவர் கையாளுகிற விதமே தனி. மிகத்திறமையாக தேர்தல் பரப்புரைகள், வியூகங்களை அவர் முன்னெடுப்பார். ஆனால், இந்தமுறை அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை? கே.சி.ஆரிடம் ஒரு மாற்றமும், தயக்கமும் தென்படுகிறது.

telangana election winds of changes

மூன்றாவது முறையாக வென்று, ஹாட் டிரிக் அடிக்க வேண்டிய முனைப்பு கே.சி.ஆரிடம் குறைந்திருக்கிறது. இந்த தேர்தலில் 95 சதவிகிதம் நடப்பு எம்.எல். ஏ.க்களையே கே.சி.ஆர். மீண்டும் நிறுத்தியிருக்கிறார். ‘இது கே.சி.ஆர். செய்த மிகப்பெரிய பிசகு. இதன்மூலம், ஆளும் அரசு மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அவர் இன்னும் அதிகமாக்கிக் கொண்டார்’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மது, மணல், நிலம் என பல விடயங்களில் கே.சி.ஆர். குடும்பம் கொள்ளை அடிப்பதாக உள்ள குற்றச்சாட்டு, காலேஸ்வரம் பாசனத்திட்ட முறைகேடு போன்றவை பி.ஆர்.எஸ். கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

சரி. காங்கிரஸ் கட்சியின் கதை என்ன?

2014, 2018 தேர்தல்களில் ஆட்சியைப் பிடித்த பி.ஆர்.எஸ். கட்சிக்கும், இரண்டாவது இடம்பிடித்த காங்கிரஸ் கட்சிக்கும் இடையே 18.5% வாக்கு சதவிகித இடைவெளி இருந்தது.

இந்தநிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் வழக்கமான காங்கிரசாகத்தான் இருந்து வந்தது. ஆனால், ரேவந்த் ரெட்டியை மாநிலத்தலைவராகப் போட்டபிறகு தெலங்கானா காங்கிரசில் ஒரு திடீர் மாற்றம். அதுபோல ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, காங்கிரஸ் கட்சியின் 6 வாக்குறுதிகள், பிரியங்காவின் பிரசாரம்..இதனாலும்கூட காங்கிரஸ் கட்சிக்குப் புதுத்தெம்பு ஏற்பட்டிருக்கிறது.

பாரதிய ஜனதா, 2019 பொதுத்தேர்தலில் தெலங்கானாவில் 4 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியது. ஐதராபாத் மாநகராட்சித்  தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு வெற்றி பெற்றது. இதனால், தெலங்கானாவில் 3ஆவது பெரிய கட்சி என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா இருக்கிறது. தென் இந்தியாவில் கர்நாடகத்துக்கு அடுத்தபடி காலூன்ற சரியான மாநிலம் தெலங்கானாதான் என்பது பா.ஜ.க.வின் கணிப்பு. ஆனால், அண்மையில் பல புள்ளிகள், பா.ஜ.க.வில் இருந்து கழன்று காங்கிரஸ் பக்கம் போனது ஒரு இழப்பாகக் கருதப்படுகிறது.

telangana election winds of changes

‘2024 பொதுத்தேர்தலில் பா.ஜ.க.தான் வெற்றி பெறும். தெலங்கானாவில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்தால், இரட்டை என்ஜின் பூட்டியது போல தெலங்கானா விறு விறுவென முன்னேறும்’ என்கிறது பாரதிய ஜனதா.

தெலங்கானாவில் முஸ்லீம்கள் அதிகம். 29 தொகுதிகளில் 15% பேர் முஸ்லீம்கள். தலைநகர் ஐதராபாத்தில் உள்ள 7 தொகுதிகளில் 50% முதல் 90% முஸ்லீம்கள். இதுபோக 35 முதல் 40 தொகுதிகளில் வெற்றி தோல்வியை முடிவு செய்யக் கூடியவர்கள் முஸ்லீம்கள்தான்.

இந்த அழகில், ‘முஸ்லீம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை நீக்கி அதை பிற்பட்ட சமூகத்தினருக்குப் பகிர்ந்தளிப்போம்’ என்று பாரதிய ஜனதா கூறியிருப்பது இந்த தேர்தலில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

2014ல் காங்கிரஸ் வசம் இருந்த முஸ்லீம் ஓட்டுவங்கி, பி.ஆர்.எஸ். கட்சிக்கு இடம் மாறிவிட்டது. முஸ்லீம் வாக்குகளைக் கவர, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் கைகோர்த்திருக்கிறது பி.ஆர்.எஸ். கட்சி.

ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் உள்பட 9 தொகுதிகளில் மட்டும் மஜ்லிஸ் போட்டியிடுகிறது. ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசாருதீன் போன்றவர்களுக்கு ஆதரவான முஸ்லீம் வாக்குகளை, ஓவைசி கட்சி பிரிக்கப் போகிறது என்பது இப்போதே தெரிகிறது. 9 தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வேலை இதுதான் போலிருக்கிறது.

வெற்றி வாய்ப்பு யாருக்கு ?

தெலங்கானா தொடர்பான அண்மை கருத்துக்கணிப்பு ஒன்று காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறது.

காங்கிரஸ் 57 முதல் 62 தொகுதிகள், பி.ஆர்.எஸ். கட்சி 41 முதல் 46 தொகுதிகள், மஜ்லிஸ் கட்சிக்கு 6 முதல் 7 தொகுதிகள், பாரதிய ஜனதாவுக்கு 3 முதல் 6 தொகுதிகள் என அது கணித்துள்ளது.

‘மார்பு ராவாலி, காங்கிரஸ் காவலி’ (மாற்றம் வேண்டும் காங்கிரஸ் விரும்புகிறது) என்பது காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் முழக்கம்.

நவம்பர் 30-ல் வாக்குப்பதிவு. டிசம்பர் 3ஆம்தேதி வாக்கு எண்ணிக்கை என்ற நிலையில், மாற்றம் வருமா என்று பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு:

telangana election winds of changes by Mohana Ruban

மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.

உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.

தெலங்கானா தேர்தல்: பின்னடைவில் பி.ஆர்.எஸ் கட்சி?-16

ஓட்டுக் கேட்ட ஆளுநர்… சிறுகட்சிகள் கையில் லகான்! க்ளைமேக்ஸை நோக்கி ராஜஸ்தான்-15

பா.ஜ.க எடுத்த ஆயுதம்: அரசியல் ஆய்வகமாகும் தெலங்கானா -14

மத்திய பிரதேசத்தில் ஆட்சிமாற்றமா? 13

ஒருபக்கம் ஊழல் குற்றச்சாட்டு; மறுபக்கம் மதவாதம் : சத்தீஷ்கரில் பா.ஜ.க.வின் இரட்டைவியூகம்! 12

கிடுக்கிப்பிடியில் சிக்கிய கே.சி.ஆர்: விறுவிறுப்பாகும் தெலங்கானா தேர்தல் 11

மணிப்பூர் ஆகிவிடுமா மிசோரம்? தேர்தல் நிலவரம் க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்! 10

ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!-9

சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!-8

மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’-7

கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!-6

மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!-5

தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு!  5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4

சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3

ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?-2

5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு?  அலசல் மினி தொடர்!-1

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *