தெலங்கானா… காங்கிரஸ் அண்ணாவா? ஆர்.எஸ்.எஸ். அண்ணாவா? யார் இந்த ரேவந்த் ரெட்டி?  

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது. ஹைதராபாத்தில் நேற்று (டிசம்பர் 4)  மாலை காங்கிரஸ் கட்சியின் புதிய  எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது. அதில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க கட்சியின் தலைவர் கார்கேவுக்கு அதிகாரம் அளித்து  தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதேநேரம் தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் மாநிலத்  தலைவர் ரேவந்த் ரெட்டிக்கு பாதுகாப்பு வழங்குமாறு தெலங்கானா போலீஸுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ரேவந்த் ரெட்டிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.  தேர்தலில் காங்கிரஸின் வெற்றி தேடித்தந்த  மாநில காங்கிரஸ் தலைவர்  என்ற அடிப்படையில் ரேவந்த் ரெட்டி தான் முதலமைச்சராகிறார் என்ற தகவல் பரபரப்பாக அடிபடுகிறது.

2014 இல் இருந்து பத்து வருடங்கள் முதலமைச்சராக இருந்த கே.சந்திரசேகர ராவை வீழ்த்தி தற்போது முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் ரேவந்த் ரெட்டி யார்? அவரது அரசியல் பின்னணி என்ன?

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியில் இல்லாத,… அதுமட்டுமல்ல காங்கிரஸ் கட்சிக்கு எதிர்முகாமில் வலிமையாக  இருந்தவர் தான் இந்த ரேவந்த் ரெட்டி.

மாணவப் பருவத்தில் ஆர்.எஸ்.எஸ்.

அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திராவின் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி கல்லூரி படிக்கும்போதே   ஆர்.எஸ்.எஸ். -பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் உறுப்பினராக இருந்தவர்.  கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு முன்னின்றவர்.

அதனால் அந்த வட்டாரத்தில் பெயர் பெற்றதால் முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். மகபூர் நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட  Midjil மிட்ஜில் பகுதியில் இருந்து மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக முதன் முறையாக 2006 இல் தேர்வு செய்யப்பட்டார். உள்ளாட்சி அமைப்பில் இருந்த செல்வாக்கு காரணமாக ரேவந்த் ரெட்டி, 2007 இல் சுயேச்சையாக போட்டியிட்டு ஆந்திராவின் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சந்திரபாபு நாயுடுவுடன் நெருங்கியது எப்படி?

சுயேச்சை மேலவை உறுப்பினராக ஆந்திர சட்டமன்ற மேலவைக்கு சென்றபோது தான் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.

இவரது லோக்கல் செல்வாக்கை உணர்ந்து தெலுங்கு தேசம் கட்சி இவரை அழைக்க அதில் சேர்ந்துகொண்டார். அதன் பலனாக 2009 இல் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோடங்கல் தொகுதியில் இருந்து தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் தெலுங்குதேசம் வேட்பாளராக போட்டியிட்டு  வெற்றி பெற்றார்.

ரேவந்த் ரெட்டி முதல் முறை எம்.எல்.ஏ.வான வரலாறு என்பது காங்கிரஸுக்கு இன்னமும் ஒரு கசப்பான நினைவுதான். ஆந்திராவின் கோடங்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ரேவந்த் ரெட்டிக்கு வாய்ப்பு கொடுத்தார் சந்திரபாபு நாயுடு.

காங்கிரஸ்  பெரும்புள்ளியை  வீழ்த்திய ரேவந்த்

40  வயது இளைஞரான ரேவந்த் ரெட்டியை  எதிர்த்து நின்றவர்  5 முறை அதே கோடங்கல் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக  இருந்த சீனியர் காங்கிரஸ் குருநாத் ரெட்டி.  14 நாட்கள் மட்டுமே கோடங்கல் தொகுதியில் பிரச்சாரம் செய்த ரேவந்த் ரெட்டி காங்கிரசில் பழம் தின்று கொட்டை போட்ட குருநாத் ரெட்டியை  7,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இத்தனைக்கும்  ரேவந்தின் சொந்த ஊரில் இருந்து 60  கிலோ மீட்டர் தொலைவில் இன்னொரு மாவட்டத்தில் இருந்தது கோடங்கல் தொகுதி. ரேவந்த் கட்சிக்கு புதியவர் என்பதால், அவருக்கு ஒரு பரிட்சை வைப்பதுபோல கோடங்கல்லுக்கு அனுப்பினார் சந்திரபாபு நாயுடு.

ஆனால் கோடங்கல் தொகுதி எங்கிருக்கிறது என்று கூட அப்போது தெரியாத ரேவந்த் ரெட்டி, அங்கே சென்று இரு வாரங்கள் மட்டுமே பிரச்சாரம் செய்து சீனியர் காங்கிரஸ் தலைவரான குருநாத் ரெட்டியை தோற்கடித்ததை சந்திரபாபு நாயுடுவே எதிர்பார்க்கவில்லை.  தெலங்கானா போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் 2014  தேர்தலிலும் கோடங்கல் தொகுதியில்  மீண்டும் போட்டியிட்டு அதே குருநாத் ரெட்டியை வீழ்த்தினார் ரேவந்த் ரெட்டி.

மகள் நிச்சயதார்த்தம்… 12 மணி நேர பெயில்

இரண்டு முறை வெற்றி பெற்று தெலங்கானாவில் தெலுங்குதேசக் கட்சியின் முக்கிய ஆளுமையாக உயர்ந்த ரேவந்த் ரெட்டிக்கு 2015 ஆம் ஆண்டு  ஒரு முக்கிய சோதனை ஏற்பட்டது.  அப்போது நடந்த மேலவைத் தேர்தலில்  தெலுங்குதேசம் வேட்பாளருக்கு வாக்களிப்பதற்காக  நியமன எம்.எல்.ஏ. ஒருவருக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் தெலங்கானா விஜிலென்ஸ் போலீஸார் ரேவந்த் ரெட்டியை கைது செய்தனர். அப்போது தெலங்கானாவில் கே.சந்திரசேகர ராவின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. சிறையில் இருந்த ரேவந்த் ரெட்டி தனது மகள் நிச்சயதார்த்துக்காக பெயில் கேட்டார். அப்போது தெலங்கானா அரசு அவருக்கு 12 மணி நேரம் மட்டுமே பெயில் கொடுத்தது.

காங்கிரசுக்கு வந்தது எப்படி?

தெலங்கானாவில் தெலுங்கு தேசக் கட்சிக்கு பெரிய அளவு செல்வாக்கு இல்லை என்பதை உணரத் தொடங்கிய ரேவந்த் ரெட்டி  கே.சி.ஆர்.பக்கம் செல்வது சாத்தியமற்றது என்பதால்… தனது பயணத்தை காங்கிரசை நோக்கித் திருப்பினார். 2017 ஆம் ஆண்டு தெலுங்கு தேசத்தில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். 2018 இல் காங்கிரஸ் மாநில செயல் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.

2018  இல் மீண்டும் கோடங்கல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால், கேசிஆர் கட்சி வேட்பாளர் பட்னம் மகேந்தர் ரெட்டியிடம் தோற்றார்.  சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, சில மாதங்களுக்குப் பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் மல்காஜ்கிரி தொகுதியில் வெற்றி பெற்றார்.  காங்கிரஸ் கட்சியில் ரேவந்த் ரெட்டிக்கு கொடுக்கப்பட்ட தொடர் முக்கியத்துவம் தெலங்கானாவின் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.

‘தனது அரசியல் வாழ்வின் ஆரம்பத்தில் காங்கிரசை ஏறி மிதித்து நசுக்கி முன்னேறியவர் ரேவந்த் ரெட்டி. அவருக்கு எப்படி காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுக்கலாம்?’ என்று கேள்வி கேட்டனர் மூத்த தலைவர்கள். ஆனால், காங்கிரஸ் மேலிடமோ ரேவந்த் ரெட்டியின் அரசியல் அணுகுமுறை களச் செயல்பாடுகள் விறுவிறுப்பாக இருப்பதாலும், கேசிஆரை அவர் சமரசமின்றி எதிர்ப்பதாலும்  2021 இல்  உத்தம் ரெட்டிக்கு பதிலாக அவரை தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியே சென்றனர். ஆனாலும் தேர்தல் வியூகவாதியான சுனில் கனுகோலுவை தன்னுடன் வைத்துக் கொண்டு 2023 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாரானார் ரேவந்த் ரெட்டி.

ஆர்.எஸ்.எஸ். அண்ணா…

தேர்தல் பிரசாரத்தில் ஓவைசி பல இடங்களில் ரேவந்த் ரெட்டியை ஆர்.எஸ்.எஸ். அண்ணா என்றுதான் அழைத்தார்.   “ரேவந்த் மாணவராக இருந்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியில் இருந்தார். பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்  கிஷன் ரெட்டி 1999 இல் தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது  அவருக்காக ரேவந்த் பாஜக கட்சிக்காரராக பணியாற்றியதை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். எனவே காங்கிரசுக்கு அளிக்கும் வாக்கும் பிஜேபிக்கு அளிக்கும் வாக்குதான்” என்ற ரீதியிலேயே ஓவைசி பிரசாரம் செய்தார்.

ஆனாலும் காங்கிரசை ரேவந்த் ரெட்டி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.  தனது  ஆரம்ப கால தொகுதியான கோடங்கல்லில் போட்டியிட்ட ரேவந்த் ரெட்டி,   பிஆர் எஸ் தலைவர்  சந்திரசேகர ராவுக்கு எதிரான தனது தனிப்பட்ட பகையைத் தீர்ப்பதற்காக  அவர் போட்டியிட்ட காமெரெட்டி தொகுதியில் போட்டியிடார். அங்கே கேசிஆர் தோற்றாலும் ரேவந்த் ரெட்டி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு பாஜக வேட்பாளர் வெங்கட்ரமண ரெட்டி  வெற்றி பெற்றார்.

மீசையை முறுக்கிய ரேவந்த்… கே.சி.ஆருக்கு பதில்! 

2015 ஆம் ஆண்டு கே.சி.ஆர். அரசால் கைது செய்யப்பட்டு சிறை வாசத்துக்குப் பின் வெளியே வந்தபோது, மீசையை முறுக்கிய ரேவந்த் ரெட்டி, ‘இதற்கு ஒரு நாள் உனக்கு சரியான பதில்  தருவேன்’ என்று ஆவேசமாக கத்தினார். அந்த பதிலை இப்போது வழங்கியிருக்கிறார் ரேவந்த் ரெட்டி.’

இன்னொரு பக்கம், ‘கேசிஆர் எதிர்ப்பில் தீவிரமாக இருக்கும் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ்  மாநில தலைவர்களுடன் அவ்வளவு  சுமுகமாக இல்லை. மேலும் என்ன இருந்தாலும் ரேவந்த் அடிப்படையில் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். எனவே வரும் காலங்களில் பாஜகவின் கண்ணசைவில் தெலங்கானாவில்  சில எதிர்பாராத திருவிளையாடல்கள் நடக்கலாம்.

வேந்தன்

+1
0
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *