தெலங்கானா முதல்வர் தேர்வு தாமதம்: ரேவந்த் ரெட்டிக்கு சவால் விடும் சீனியர்கள்?

அரசியல்

தெலுங்கானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி டிசம்பர் 4  திங்கள்கிழமை  மாலை கூடியது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பார்வையாளரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமார், தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

தெலுங்கானா முதல்வரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு செய்ய வேண்டும் என்று எம்எல்ஏக்கள் ஒருமனதாக தீர்மானித்துள்ளதாக கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் டிகே சிவக்குமார் தெரிவித்தார். இந்த முன்மொழிவை தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முன்வைத்ததாகவும், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதாகவும் அவர் கூறினார்.

மேலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒவ்வொருவரும் சிவகுமாரை தனித் தனியாக சந்தித்து முதல்வர் பதவிக்கு தங்களுக்கு விருப்பமானவரை கூறுமாறு கேட்டுள்ளது காங்கிரஸ் தலைமை. அதன்படியே ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் சிவக்குமாரை சந்தித்துள்ளனர்.

டிசம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவே ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ். எனினும், ஆட்சி அமைக்கும் தேதி மற்றும் பதவியேற்பு விழா ஆகியவை முடிவு செய்யப்படவில்லை.

தெலங்கானாவில் காங்கிரசின் சுனாமி என்று அழைக்கப்படும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பரபரப்பாக பேசப்பட்டாலும்… அதை ஏன் காங்கிரஸ் அறிவிக்கத் தாமதமாகிறது என்றால் வழக்கம்போல சீனியர்களின் குடைச்சல்தான்.

Image

2021 வரை காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த உத்தம் குமார் ரெட்டி மூத்த காங்கிரஸ் தலைவர். நல்ல கொண்டா எம்பி உட்பட ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். விமானப் படை போர் விமானியான உத்தம்குமார், தன் இளம் வயதிலேயே ராஜீவுடன் நெருக்கமானவர். இன்றும் ராஜீவ் குடும்பத்தின் நன் மதிப்பைப் பெற்றவர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மல்லு பாட்டி விக்ரமார்கா, 63 வயதான இவர் தலித் சமூகத்தின் மாலா பிரிவைச் சேர்ந்தவர். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்து, துணை சபாநாயகராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மல்லு ரவியின் சகோதரரான இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1,400 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டார். இவர் முதலமைச்சர் ரேஸில் இருப்பதாக கூறப்பட்டாலும் இவர் ரேவந்த் ரெட்டியின் ஆதரவாளராகிவிட்டார்.

58 வயதான வெங்கட் ரெட்டி, 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் கட்சியில் மூத்தவர்களில் ஒருவர். நான்கு முறை எம்எல்ஏவாகவும், எம்பியாகவும் இருந்துள்ளார், மேலும் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள 12 சட்டமன்ற தொகுதிகளில் 11 தொகுதிகளை வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

65 வயதாகும் தாமோதர் ராஜநரசிம்மா இன்னொரு பட்டியல் சமுதாய காங்கிரஸ் தலைவர். ராஜசேகர ரெட்டி அமைச்சரவையில் அமைச்சராகவும், கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்வராகவும் இருந்துள்ளார். அவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக காங்கிரசில் உள்ளது.

இப்படி காங்கிரசின் சீனியர்கள் முதலமைச்சருக்கான தகுதியோடு இருக்கிறார்கள். இவர்களில் சிலர் ரேவந்த் ரெட்டிக்கு எதிர் நிலையிலும் இருக்கிறார்கள். எனவேதான் தெலங்கானாவில் மாபெரும் வெற்றி பெற்றாலும் முதலமைச்சரை முடிவு செய்ய தாமதிக்கிறது காங்கிரஸ்.

ஆனாலும் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 64 பேரில் சுமார் 50 பேர் ரேவந்த் ரெட்டிக்குதான் ஆதரவளிக்கிறார்கள் என்பதால் அவரே முதல்வர் என்கிறார்கள் ரேவந்த் ரெட்டி வட்டாரங்களில்.

காங்கிரஸ் காங்கிரஸ்தான்.

வேந்தன்

’அந்த 4 ஆயிரம் கோடி என்னாச்சு?’: எடப்பாடி குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதில்!

மிக்ஜாம் புயல்: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *