தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி : காங்கிரஸ் அறிவிப்பு!

அரசியல் இந்தியா

தெலங்கானா மாநில காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவராக ரேவந்த் ரெட்டியை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்துள்ளதாக பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (டிசம்பர் 5) டெல்லியில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்பது உறுதியாகிவிட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. சந்திரசேகர ராவ் கட்சி 39 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியுற்றது.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்.

இந்தநிலையில் தெலங்கானாவில் முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தெலங்கானா காங்கிரஸ் சீனியர்களான உத்தம் குமார் ரெட்டி, மல்லு பாட்டி விக்ரமார்கா, வெங்கட் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா ஆகியோரும் முதல்வர் பதவி கேட்டு பிடிவாதமாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்தசூழலில் நேற்று அடுத்த முதல்வர் யார் என தேர்வு செய்யப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த பிரச்சினையை தீர்ப்பார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிவிட்டு பெங்களூரு புறப்பட்டார் டி.கே.சிவக்குமார்.

இதற்கிடையே இன்று ஹைதராபாத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ரேவந்த் ரெட்டியை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இன்று மாலை மல்லிகார்ஜுன கார்கே காணொளி காட்சி மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் டெல்லியில் ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார், தெலங்கானா மாநில பொறுப்பாளர் மாணிக்ரோ தாக்ரே ஆகியோருடன் கார்கே ஆலோசனை நடத்தினார்.

இதன்பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பெயரை அறிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கனவு,காதல், போராட்டம்.. ஷாருக்கானின் “டன்கி” ட்ரெய்லர் எப்படி?

மின்சார ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள்… யூடியுபர் மீது பாய்ந்தது சைபர்கிரைம் வழக்கு!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *