தற்போது 7 மணி நிலவரப்படி தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் வெற்றிவாகை சூடி 14 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
39 இடங்களில் முன்னிலை வகிக்கும் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல 8 இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக 7 இடங்களில் வென்றுள்ளது. 7 இடங்களில் முன்னிலை வகிக்கும் ஓவைசி கட்சி 2 இடங்களில் வென்றுள்ளது. சிபிஎம் 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் கேசிஆர், ரேவந்த் ரெட்டி என இரண்டு முதல்வர் வேட்பாளர்களை வீழ்த்தி பாஜகவின் வேங்கட ரமண ரெட்டி காமாரெட்டி தொகுதியை தன் வசப்படுத்தி உள்ளார். தெலங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பாஜக வேட்பாளர் வேங்கட ரமண ரெட்டி ஆகிய மூவரும் காமாரெட்டி தொகுதியில் போட்டியிட்டனர்.
இன்று (டிசம்பர் 3) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ரேவந்த் ரெட்டி முதல் இடத்தில் இருந்தார். கேசிஆர், வேங்கட ரமண ரெட்டி இருவரும் 2-வது மற்றும் 3-வது இடங்களில் மாறி,மாறி ஊசலாடினர். 13-வது சுற்றின் முடிவில் வேங்கட ரமண ரெட்டி 625 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் இடத்திலும், ரேவந்த் ரெட்டி இரண்டாவது இடத்திலும் இருந்தனர். கேசிஆர் 1,406 வாக்குகள் வித்தியாசத்தில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
தொடர்ந்து 16-வது சுற்றின் முடிவில் வேங்கட ரமண ரெட்டி 53,261 வாக்குகளுடன் முதல் இடத்திலும், கேசிஆர் 50,169 வாக்குகளுடன் 2-வது இடத்திலும் இருந்தனர். இருவருக்கும் இடையில் 3,092 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி 48,082 வாக்குகளுடன் 3-வது இடத்தில் இருந்தார்.
தற்போது 20 சுற்றுகளின் முடிவில் பாஜக வேட்பாளர் வேங்கட ரமண ரெட்டி 66,652 வாக்குகளுடன் காமாரெட்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் 59,911 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி 54,916 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதன் மூலம் பாஜக வேட்பாளர் வேங்கட ரமண ரெட்டி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரேவந்த் ரெட்டி, கேசிஆர் என முதல்வர்கள் வேட்பாளர்கள் இருவரையும் வீழ்த்தி காமாரெட்டி தொகுதியில் வெற்றிவாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா