ரயில்வே பணிகளுக்கு நிலம் பெற்ற விவகாரத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சிபிஐ விசாரணைக்கு இன்று (மார்ச் 25) ஆஜரானார்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார்.
அந்த காலகட்டத்தில் ரயில்வே துறையில் குரூப் டி பிரிவில் ஏராளமானோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். அப்போது லாலு பிரசாத் குடும்பத்தினர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் நிலத்தை அன்பளிப்பாகவும் குறைந்த விலையிலும் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
மேலும் இது தொடர்பாக முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் முதலமைச்சரும் லாலு பிரசாத் யாதவ் மனைவியுமான ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 14 பேர் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் அனைவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தது சிபிஐ.
ஆனால் தேஜஸ்வி யாதவ், அவரது மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி மார்ச் 4,11 மற்றும் 14 என தொடர்ந்து 3 முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 10 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக பாட்னா மற்றும் டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராக 4வது முறையாக சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது. மேலும், அவர் சிபிஐ விசாரணையின் போது கைது செய்யப்படமாட்டார் என்று சிபிஐ உறுதியளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மார்ச் 25 ஆம் தேதி தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் தேஜஸ்வி யாதவ் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக டெல்லி இல்லத்தில் இருந்து சிபிஐ அலுவலகத்திற்குப் புறப்பட்ட தேஜஸ்வி யாதவ் ஏ.என்.ஐ நிறுவனத்திடம், “நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே புலனாய்வு அமைப்புகளுடன் ஒத்துழைத்து வருகிறோம். தற்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழலில்… தலைவணங்குவது எளிது, போராடுவது தான் கடினம். போராடுவது கடினமாக இருந்தாலும் சவாலை ஏற்று வெற்றி பெற முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
ராஷ்டிரிய ஜனதா கட்சி எம்பியும் தேஜஸ்வி யாதவின் சகோதரியுமான மிசா பார்தியும் இந்த வழக்கில் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
மோனிஷா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஸ்டாலின் வைத்த மூன்று கோரிக்கைகள்!
மோடி- அதானி உறவு பற்றி கேள்வி எழுப்பியதால்தான் பதவி பறிக்கப்பட்டது: ராகுல் காந்தி