எமர்ஜென்சி கதவு திறந்த விவகாரம் : அண்ணாமலை விளக்கத்தால் புது குழப்பம்!

Published On:

| By christopher

திருச்சி சென்ற விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி யாதவ் அவசர கால கதவை திறக்கவே இல்லை என்று அண்ணாமலை இன்று (ஜனவரி 19) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணம் செய்திருந்தனர்.

அந்த விமானம் சென்னையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் அவசரக்கால கதவு திறக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக பயணிகள் கீழே இறக்கப்பட்டு, விமானத்தில் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு 142 நிமிடங்கள் தாமதமாக அந்த விமானம் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் சமீபத்தில் வெளியே வந்த நிலையில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவும், அவருடன் பயணித்த அண்ணாமலையும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதையடுத்து விசாரணைக்கு மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ உத்தரவிட்டது.

தேஜஸ்வி மன்னிப்பு கோரினார்

அதன்பின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், ”விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்தது பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா என்றும்,

அவர் தவறுதலாக அவசரகால கதவை திறந்ததற்கு விமானியிடமும், சிப்பந்திகளிடமும் தேஜஸ்வி யாதவே கூறி மன்னிப்பும் கேட்டுக்கொண்டதாக நினைக்கிறேன்.” என்று கூறியிருந்தார்.

தேஜஸ்வி அதை செய்யவே இல்லை

இந்நிலையில் தேஜஸ்வியுன் பயணித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது புதிய விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகாவில் சிக்மகளூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ”தேஜஸ்வி சூர்யா படித்தவர். விமானத்தின் அவசர கதவை திறக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அதனை அவர் திறக்கவும் இல்லை. அவர் தனது கையை அந்தக் கதவின் மேல் வைத்திருந்தார்.

அப்போது கதவில் இருந்த இடைவெளியை பார்த்ததும் விமானப் பணியாளர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதை நானும் பார்த்தேன். அவர் தவறு செய்யவில்லை என்றாலும் அவர் எம்.பி என்ற பொறுப்பில் இருப்பதால் மன்னிப்பு கோரினார்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரியதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறிய நிலையில், தேஜஸ்வி கதவை திறக்கவே இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

அச்சத்தில் டெல்லி பெண்கள் : ஆளுநரை சாடிய முதல்வர்

ஈரோடு கிழக்கு தொகுதி: காங்கிரஸ் போட்டி!

Comments are closed.