தேட வைத்து வந்த தேஜஸ்வி யாதவ்

அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தாமதமாக வந்து உரையாற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 1) சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொதுக்கூட்டம் தொடங்கியும் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவில்லை.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட டி.ஆர். பாலு, துரைமுருகன், மல்லிகார்ஜுனா கார்கே, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா ஆகியோர் பேசி முடிக்கும் வரையிலும் தேஜஸ்வி யாதவ் வரவில்லை என்பதால் பொதுக்கூட்டத்தைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நன்றியுரை வாசிக்கத் தொடங்கினார்.

மா.சுப்பிரமணியன் நன்றியுரை வாசித்துக் கொண்டிருக்கும் போதே தேஜஸ்வி யாதவ் விமானத்தில் இருந்து இறங்கி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படியே நன்றியுரையை வாசித்து முடிக்கும் நேரத்தில் தேஜஸ்வி யாதவ் மேடைக்கு வந்து மேடையில் இருந்த தலைவர்களை பார்த்து வாழ்த்தி விட்டு, காலதாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கூறிவிட்டு உரையைத் தொடங்கினார்.

அப்போது, “உங்களது இந்த 70 வருடங்கள் உங்கள் கனவைத் தொடருவதற்கான போராட்டம். அந்த கனவானது இந்தியக் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை மற்றும் நீதியின் கொள்கையைப் பின்பற்றுவதாக இருந்திருக்கிறது.

உங்களது தலைமைபண்பு என்பது பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மரபில் இருந்து வந்தது. கண்ணியம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் இந்த மரபு வந்துள்ளது.

சோஷியலிசம் மற்றும் சமூக நீதிகள் கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் சந்திக்கும் தளமாக மாறிவிட்டது தமிழ்நாடு. சமூக நீதியின் உறுதியுடன் இருந்தால் மட்டுமே வலுவான தலைமை உருவாகும்.

வடமாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள், சமூகநீதியை மட்டும் கொண்டு வாக்காளர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்குவதைத் தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கொள்கைகளை இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளாக உள்ள கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.

வலுவான ஒரு மாற்றுச் சமூகத்தை உருவாக்குவதற்காக முதல்வர் ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளது. இதனால், ஜனநாயகமே அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

மராட்டியத்தில் ஆட்சியைப் பிடித்தது போல், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களிலும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தது. ஆனால் பீகார் அவர்களைத் தோல்வியடையச் செய்தது.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பாதையில் இணைய வேண்டும். அப்போது அவர்களை எதிர்த்து போராடுவது நமக்கு கடினமான இலக்காக இருக்காது. ” என்று பேசியிருந்தார்.

மோனிஷா

எனக்கு எழுபது வயதா…மு.க.ஸ்டாலின் உரை!

இந்திய நாட்டுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கும் காலம் வரும்: துரைமுருகன்

tejashwi yadav speech in mk stalin birthday general meeting
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.