4 வருட தாமதத்துக்கு பின் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் கோரிக்கை நிறைவேற்றியதை பெரிய சாதனையாக காட்டிக்கொள்ள முயற்சிப்பது சரியல்ல என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு கடந்த 2019ம் ஆண்டு தேஜஸ் அதிவிரைவு ரயில் தொடங்கப்பட்டது.
இந்த ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு நண்பகல் 12.15 மணியளவில் சென்றடையும்.
அதேபோல மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் தேஜஸ் அதிவிரைவு ரயில் இரவு 9 .15 மணியளவில் எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும்.
சென்னை – மதுரைக்கு இடையே திருச்சி, திண்டுக்கல் ரயில் நிலையங்களிலும் தேஜஸ் ரயில் நின்று செல்லும்.
ஆனால் சென்னை எழும்பூருக்கு அடுத்தபடியாக பெரிய ரயில் நிலையமான தாம்பரம் சந்திப்பிலும் தேஜஸ் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனை கடந்த 2019ம் ஆண்டு முதல் திமுக எம்பி டி.ஆர்.பாலு மத்திய ரயில்வே அமைச்சரிடமும், நாடாளுமன்றத்திலும் பல்வேறு முறை கோரிக்கை வைத்திருந்தார்.
சமீபத்தில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகனும் இதுகுறித்து ரயில்வே துறைக்கு கடிதமும் எழுதி இருந்தார்.
இந்நிலையில் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இன்று முதல் தேஜஸ் அதிவிரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து முதல் நாளான இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி. டி.ஆர்.பாலு, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் தாம்பரம் வந்த தேஜஸ் ரயிலை வரவேற்று பின்னர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசுகையில், ”4 ஆண்டுகால தொடர் முயற்சியால் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிற்கிறது.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே முதல் கோரிக்கையாக தேஜஸ் ரயிலை தாம்பரத்தில் நிறுத்த வேண்டுகோள் வைத்தேன். அது ஏற்கப்படாததால் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினேன்.
2021ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி நடந்த தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூட்டத்திலும் இக்கோரிக்கையே வலியுறுத்தினேன். அதன்பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன்.
கடந்த டிசம்பர் மாதம் கூட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் தேஜஸ் ரயிலை தாம்பரத்தில் நிறுத்துமாறு முறையிட்டேன்.
தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்
இப்படி கடந்த 4 ஆண்டுகளாக நான் எழுப்பிய பல்வேறு முறையீடுகளுக்கு பிறகுதான் தேஜஸ் ரயில் இன்றுமுதல் தாம்பரத்தில் நின்று செல்கிறது.
நீண்ட தாமதத்துக்கு பிறகு மத்திய அரசு லட்சக்கணக்கான பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.
நீண்ட தாமதத்துக்கு பின் கோரிக்கை நிறைவேற்றியதை பெரிய சாதனையாக ஒரு சிலர் காட்டிக்கொள்ள முயற்சிப்பது சரியல்ல.
அப்படியென்றால் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பல முக்கிய கோரிக்கைகளில் தலையிட்டு செய்து காட்டியிருக்கலாமே?
பல முக்கிய திட்டங்களை மத்திய அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கல்வி நிறுவனங்களில் ‘சாதி’ தற்கொலைகள் : சந்திரசூட் வேதனை
உங்களால் தான் நான்: சமந்தாவின் உருக்கமான பதிவு!