Tear gas shelling on farmers

டெல்லி : விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு… தலைவர்கள் கண்டனம்!

அரசியல் இந்தியா

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இன்று (பிப்ரவரி 13) டெல்லி நோக்கி பேரணி வரும் விவசாயிகள் மீது தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுளை வீசி வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்குமாறு மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்க நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மாபெரும் பேரணிக்காக இன்று டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர்.

முன்னதாக மத்திய அரசு உடன் விவசாய சங்கத் தலைவர்கள் சுமார் 5 மணி நேரமாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போலீசார், துணை ராணுவம் குவிப்பு!

டெல்லி நோக்கி வரும் விவசாயிகளை தடுக்க டெல்லி, ஹரியானா எல்லையில் தடுப்புகள், முள் வேலிகள், பள்ளங்களை அமைத்து போலீசார் சீல் வைத்துள்ளனர்.

மேலும் அவர்களை டெல்லிக்குள் வரவிடாமல் தடுக்க 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வரும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டெல்லி நோக்கி வரும் விவசாயிகளை டிரோன் மூலமும் போலீசார் கவனித்து வருகின்றனர்.

ஹரியானாவுடனான ஜரோடா எல்லை மற்றும் டெல்லி திக்ரி, சிங்கு எல்லையில் ஆயிரக்கணக்கான டெல்லி போலீஸார், துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணீர் புகை குண்டு வீச்சு!

பஞ்சாபில் இருந்து இன்று காலை முதல் சாரைசாரையாக தங்களது டிராக்டரில் ராஜ்புரா பைபாஸைக் கடந்து ஹரியானாவின் அம்பாலாவை நோக்கி விவசாயிகள் சென்றனர்.

அவர்கள் பஞ்சாப் – ஹரியானாவின் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் அங்கே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை கலைக்க ஹரியானா போலீசார் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருகின்றனர்.

மம்தா பானர்ஜி கண்டனம்!

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tear gas shelling on farmers

இதுபோன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது பதிவில், ”விவசாயிகளின் குரலை ஒடுக்க முள்வேலி, ட்ரோன்களில் இருந்து கண்ணீர் புகை குண்டு வீச்சு, ஆணிகள் மற்றும் துப்பாக்கிகள் எல்லாம் சர்வாதிகார மோடி அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மோடி  750 விவசாயிகளின் உயிரைப் பறித்தது நினைவிருக்கிறதா? கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் விவசாயிகளுக்கு அளித்த மூன்று வாக்குறுதிகளை மோடி அரசு மீறியுள்ளது.

1️⃣ விவசாயிகளின் வருமானம் 2022க்குள் இரட்டிப்பாகும்

2️⃣ சுவாமிநாதன் அறிக்கையின்படி உள்ளீட்டுச் செலவு + 50% MSP நடைமுறைப்படுத்தல்

3️⃣ MSP க்கு சட்ட நிலை

இப்போது 62 கோடி விவசாயிகளின் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இன்று சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் காங்கிரஸ் கட்சி “கிசான் நியாய்” குரல் எழுப்பும். விவசாயிகள் இயக்கத்திற்கு முழு ஆதரவு உண்டு. பயப்பட மாட்டோம், தலைவணங்க மாட்டோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tear gas shelling on farmers

அதேபோன்று மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியதற்காக கண்ணீர் புகை குண்டுகளால் தாக்கப்படும் போது நம் நாடு எப்படி முன்னேறும்? விவசாயிகள் மீது பாஜகவினர் நடத்திய கொடூரத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கத் தவறியதுடன், பயனற்ற விளம்பர நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுதும் ஏற்படுத்தி வரும் புதிய இந்தியாவின் மாயையை மத்திய அரசு அம்பலப்படுத்துகிறது.

விவசாயிகளின் எதிர்ப்பை அடக்குவதற்குப் பதிலாக, தேசத்திற்குத் தீங்கு விளைவித்து வரும் தங்களது அகங்காரம், அதிகார வெறி மற்றும் ஆட்சி நிர்வாக திறமையின்மை ஆகியவற்றை அகற்ற பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tear gas shelling on farmers

போக்குவரத்து பாதிப்பு!

மேலும் விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைக்கு சீல் வைக்கப்பட்டு, 8 முக்கிய மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக குருகிராம், காசியாபாத், நொய்டா உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே டெல்லி வரும் விவசாயிகளின் போராட்டத்தையொட்டி பவானா மைதானத்தை தற்காலிக சிறைச்சாலையாக மாற்ற மத்திய அரசு கோரிக்கை வைத்த நிலையில்  டெல்லி அரசு நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்த ஜெ.பி.- திமுகவில் அதிர்வலைகள் ஏன்?

”அடிமேல் அடி” ஆர்சிபி-க்கு வந்த அடுத்த சோதனை… என்னன்னு பாருங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “டெல்லி : விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு… தலைவர்கள் கண்டனம்!

  1. விவசாயிகள் பேரில் எச்சை பொறுக்கிகள் நுழைந்து தேர்தல் அரசியலுக்காக ஆளும் அரசை அசைத்து பார்த்து ஏதாவது அவப்பெயரை கொடுத்து மாற்றம் வராதா என பிணம் தின்னும் கழுகுகள் போல காத்திருக்கிறார்கள்…
    சாமானிய மக்கள் இந்த தேசத்திற்கும் அரசிற்கும் காப்பு அரணாக எப்போதும் இருப்பார்கள்..
    இந்த கள்ள போராட்டம் முற்றிலும் தோல்வி அடைந்து லட்சம் குப்பைகள் என்ன தகிடுதத்த நடை வடிக்கைகளை மக்கள் சிரித்து கொண்டே தேர்தல் தேதியை நோக்கி எதிர் நோக்கி ஏற்கனவே தங்களை தயார்படுத்தி விட்டார்கள்..
    வெல்க பாரதம்..வெல்க தேச மக்கள் ஒற்றுமை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *