ஆளுநர் மாளிகையில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ராஜ்பவனில் உள்ள புல்வெளிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இடியுடன் கூடிய கனமழை நாளையும் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கனமழையைக் கருத்தில் கொண்டும், விருந்தினர்களுக்கு சிரமத்தைத் தவிர்ப்பதற்காகவும், ராஜ் பவன் “அட் ஹோம் ரிசப்ஷன்” (தேநீர் விருந்து) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேநீர் விருந்து நடத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக நீட் தேர்வு தோல்வியால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் நீட் தேர்வு ரத்து மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காதது தான் தற்கொலைக்கு காரணம் என்று அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே இந்த தற்கொலை சம்பவத்தையும், ஆளுநரின் சமீபத்திய பேச்சையும் மேற்கோள் காட்டி ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறுவதாக இருந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளும் ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.
இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காரணம் கனமழையா? கண்டன மழையா? என்று விமர்சிக்கப்படுகிறது.
மோனிஷா
தந்தை, மகன் தற்கொலை… குடியரசுத்தலைவருக்கு முதல்வர் கடிதம்!
ஏமாற்றி அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு